search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு நாடு ஒரே தேர்தலை 2024-ம் ஆண்டு நடத்தினால் ஏற்றுக்கொள்வோம்- அமைச்சர் ஜெயக்குமார்
    X

    ஒரு நாடு ஒரே தேர்தலை 2024-ம் ஆண்டு நடத்தினால் ஏற்றுக்கொள்வோம்- அமைச்சர் ஜெயக்குமார்

    நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு 2024-ம் ஆண்டு ஒன்றாக தேர்தல் நடத்தினால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே என்ன நிலைப்பாடு எடுத்து இருந்தாரோ? அதே நிலைப்பாட்டில் தான் நாங்களும் உள்ளோம். ஆனால், தமிழகத்தின் சட்டமன்ற பதவிக்காலம் 2021 வரை இருக்கிறது. எனவே அதை இப்போதைய நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்க்க வேண்டாம்.

    ஆனால் 2024-ம் ஆண்டு ஒன்றாக சேர்த்து தேர்தல் நடத்தினால் ஏற்றுக் கொள்கிறோம். நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், எங்களுக்கு சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தக்கூடாது என்ற கருத்தை தான் கடிதம் மூலம் தெரிவித்து இருக்கிறோம். தலைமை கழக நிர்வாகிகள் டெல்லி சென்று இருக்கிறார்கள். அவர்களும் சொல்வார்கள்.

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சினிமாவில் எப்போதும் சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை கொடுத்தவர். அதே போன்று நடிகர்கள், திரைப்படத்துறையினர், இயக்குனர்கள், டைரக்டர்கள் சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை கொடுக்காமல், வெறும் லாபநோக்கத்தோடு, பணம் போட்டு முதலீடு செய்கிறோம், நாம் சம்பாதிக்க வேண்டும் சமுதாயம் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று இருக்கக்கூடாது.

    புகை பிடித்தல் உடல்நலத்துக்கு கேடு. எனவே, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் சினிமாவில் இருப்பது சமுதாயத்துக்கு சீர்கேடாக அமைகிறது. ஆகவே, சினிமாவில் அத்தகைய காட்சிகள் இல்லாமலும், நடிகர்கள் அந்த காட்சிகளில் நடிக்காமல் இருந்தாலும் நிச்சயமாக அது சமுதாயத்துக்கு செய்யும் உதவியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×