search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமைவழிச்சாலைக்கு தொடரும் எதிர்ப்பு- தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
    X

    பசுமைவழிச்சாலைக்கு தொடரும் எதிர்ப்பு- தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

    பசுமை வழிச்சாலைக்காக விவசாய நிலத்தில் கல் ஊன்றியபோது அதிகாரிகள் முன்னிலையில் தாய்-மகள் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GreenwayRoad
    செய்யாறு:

    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு, செங்கம் தாலுகாகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று கீழ்கொளத்தூர் என்னும் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி, விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    எதிர்ப்புக்கு மத்தியிலும் அதிகாரிகள் நிலம் அளவிட்ட இடங்களில் கல் ஊன்றிவிட்டு சென்றனர். அதன்பின்பு எருமைவெட்டி கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு உள்ள விவசாயி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வயலில் அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.

    அதற்கு ரமேஷின் மனைவி மீனாட்சி (வயது 40), மகள் தேவதர்ஷினி (18) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார்கள் மகேந்திரமணி, தமிழ்மணி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சி திடீரென தன் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனிலிருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை பிடுங்கி அவரை சமரசம் செய்தனர்.

    தொடர்ந்து வயலில் நிலம் அளவீடு செய்து கல் ஊன்றும் பணி நடந்தது. இதனை பார்த்த அவரது மகள் தேவதர்ஷினி “எங்களின் எதிர்ப்பையும் மீறி எப்படி கல் நடலாம். அந்த கல்லை அகற்றுங்கள் இல்லாவிட்டால் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்” என எச்சரிக்கை விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகளும், போலீசாரும் அவரை நெருங்கியபோது தேவதர்ஷினி பிளேடால் தனது கழுத்தை அறுத்தார். அவரது கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டது.

    அங்கிருந்த பொதுமக்கள் துணியை தண்ணீரில் நனைத்து அந்த ஈர துணியை தேவதர்ஷினியின் கழுத்தில் இறுக்கி கட்டினர். உடனே அவரை சமரசப்படுத்த அங்கு நடப்பட்டிருந்த கல்லை மட்டும் அதிகாரிகள் அகற்றினர். மற்ற இடங்களில் கல் நடும் பணி தொடர்ந்த வண்ணம் இருந்தது.

    அப்போது திடீரென மீனாட்சி மீண்டும் தனது கிணற்றின் அருகே வந்து “பணிகளை நிறுத்தாவிட்டால் குடும்பத்துடன் நாங்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம்” என்றார்.

    தேவதர்ஷினி பிளஸ்-2 முடித்து விட்டு அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #GreenwayRoad
    Next Story
    ×