search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டுக்கு சட்டசபையில் முதல்வர் விளக்கம்
    X

    ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டுக்கு சட்டசபையில் முதல்வர் விளக்கம்

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswamy #TNAssembly #IGPonManickavel
    சென்னை:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், தன்னிடம் கேட்காமல் அந்த பிரிவில் உள்ள போலீசாரை இடமாற்றம் செய்வதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் ஐ.ஜி.யின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கேட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு ரூ.35 லட்சத்து 39 ஆயிரத்து 857 ரூபாய் செலவில்  உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கேட்டபடி 320 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோரிய வசதிகளை செய்து தரவில்லை என்பது எப்படி நியாயமாகும்?

    பணியிட மாற்றம் என்பது அனைத்து ஆட்சியிலும் நடைபெறும் ஒன்றுதான். அதிமுக ஆட்சியில்தான் சிலைகள் திருடப்பட்டது போல காங்கிரஸின் ராமசாமி கூறி வருகிறார். சிலை திருட்டு குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்பது போல் ராமசாமி கூறி வருகிறார். நாங்கள் எப்போதும் தெய்வ பக்தி உடையவர்கள். நானும் தெய்வ பக்தி உடையவன். ஆகவே, உங்களுக்கு அந்த மாறுபட்ட கருத்தே தேவையில்லை.

    சிலை திருட்டு தடுப்பு பிரிவை உருவாக்கிய ஆட்சியே அ.தி.மு.க. ஆட்சிதான். எம்ஜிஆர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலைக் கடத்தல் பிரிவு தொடர்ந்து செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswamy #TNAssembly #IGPonManickavel

    Next Story
    ×