search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத் துறையின் புதிய திட்டங்கள் - சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு
    X

    சுகாதாரத் துறையின் புதிய திட்டங்கள் - சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

    தமிழகத்தில் நடப்பு ஆண்டில் சுகாதாரத்துறையால் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். #TNAssembly #TamilNaduCM
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் உள்ள 985 துணை சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக, 82 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
     
    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனைத்து சிறப்பு துறைகளும் ஒரே அடுக்குமாடி கட்டடத்தில் செயல்படும் வகையில், தற்போது கட்டப்பட்டுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டடத்தில், 4-வது தளம் முதல் 6-வது தளம் வரை, மேலும் மூன்று தளங்கள் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நோயாளிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள வெளி நோயாளிகள் பிரிவு கட்டடத்திலேயே அனைத்து துறைகளும் செயல்படும் விதத்தில், தற்போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டடத்திற்கு மேல், 5வது தளம் முதல் 8 வது தளம் வரை, மேலும் நான்கு தளங்கள், 42 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளுக்கு பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திட, 30 கோடி ரூபாய் செலவில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்படும்.

    மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக, “பிரேக்கி” தெரப்பியுடன் கூடிய “சி.டி.ஸ்டிமுலேட்டர்” மற்றும் “பங்க்கர்” கருவிகள் 22 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திட, “தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் அவசர கால சிகிச்சை மையங்களுக்கு, நவீன மருத்துவக் கருவிகள், 21 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    காச நோயாளிகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 96 ஆயிரத்து 200 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் “மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம்” ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    நடப்பாண்டில், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், மாணவியர் விடுதிகள் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ், 12 அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நடப்பாண்டில் எழும்பூர், பூவிருந்தவல்லி மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, 17 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் அறிவித்துள்ளார். #TNAssembly #TamilNaduCM
    Next Story
    ×