search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டையில் பா.ஜனதா பிரமுகர்கள் திடீர் கைது
    X

    முத்துப்பேட்டையில் பா.ஜனதா பிரமுகர்கள் திடீர் கைது

    முத்துப்பேட்டையில் பா.ஜனதா பிரமுகர்கள் திடீரென கைது செய்யப்பட்டதால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை உடனடியாக அகற்றக்கோரியும் பா.ஜனதா சார்பில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த போராட்டத்திற்கு எதிராக சில அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்தனர். இதனால் முத்துப்பேட்டையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசார் இரு தரப்பினரின் அனைத்து போராட்டத்திற்கும் அனுமதி மறுத்து தடை செய்தனர். இருந்தும் போராட்டங்கள் அறிவிப்பதும், பின்னர் தடை செய்வதுமாக தொடர்ச்சியாக பரபரப்பான சூழ்நிலை உருவானது. இந்தநிலையில் இன்று பா.ஜனதா சார்பில் மீன் மார்க்கெட்டை உடன் அகற்றக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படலாம் என்ற நிலையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரு தரப்பினரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் பா.ஜ சார்பில் திட்டமிட்டப்படி இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் எஸ்.பி. மயில்வாகனன், ஏ.டி.எஸ்.பி. ஜான்ஜோசப், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், நன்னிலம் டி.எஸ்.பி. அருண் உள்ளிட்ட 5 டி.எஸ்.பி.க்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஜாம்புவானோடை கிராமத்தில் உள்ள பா.ஜ. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.

    அதேபோல் பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா தலைமையிலான போலீசார் பேட்டை கிராமத்தில் உள்ள பா.ஜ. மாவட்ட தலைவர் பேட்டை சிவா வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். 

    மேலும் உண்ணாவிரதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கோட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் ராமலிங்கம், செல்வம், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டி.ஐ.ஜி. லோகநாதன் சம்பவ இடங்களை பார்வையிட்டார்.

    Next Story
    ×