என் மலர்
செய்திகள்

மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.750 ஆனதால் பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை கடுமையாக வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அதேபோல வீடுகளுக்கு உபயோகிக்கப்படும் சமையல் ‘கியாஸ்’ சிலிண்டர் விலையும் ரூ.750.50 ஆக உயர்ந்துள்ளது. 14.2 கிலோ எடைகொண்ட கியாஸ் சிலிண்டர்களை வீடுகளில் பொதுமக்கள் உபயோகித்து வருகிறார்கள்.
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம்காட்டி கியாஸ் சிலிண்டர் விலை ‘மள மள’வென உயர்ந்துள்ளது.
சமையல் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து கியாஸ் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இதுகுறித்து சென்னை கியாஸ் ஏஜென்சியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது போல கியாஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்தி வருகின்றன. தற்போது ரூ.750.50-க்கு கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் புக்கிங் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடுமுழுவதும் மாதந்தோறும் சமையல் எரிவாயு விலை மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து தான் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டு உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
புரசைவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.750 ஆக உயர்ந்துள்ளது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இல்லத்தரசிகள் மீண்டும் விறகு அடுப்புகளை உபயோகப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
எனவே விலை உயர்வை தடுக்க வேண்டும். மானியம் வங்கி கணக்கில் வரவு வைப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் ரூ.750 பணத்தை செலுத்தி சிலிண்டரை பெற ஏழை, எளிய மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். உடனடியாக விலையேற்றத்தை ரத்து செய்து குறைந்த விலையிலேயே சிலிண்டர்களை வழங்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.