search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.வி.சேகரை கட்சிப்பணியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம்- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    எஸ்.வி.சேகரை கட்சிப்பணியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம்- தமிழிசை சவுந்தரராஜன்

    எஸ்.வி.சேகரை கட்சிப்பணியில் இருந்தும், சில பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்கிவைத்துள்ளோம் என்று கோவையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #SVeShekher #tamilisaisoundararajan
    கோவை:

    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து நேற்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர் களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் ‘மக்கள் மருந்தகம்’ மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. மருத்துவ செலவுகள் குறைந்துள்ளது. தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என்று சிலர் திட்டம் போட்டு கிராமங்களுக்கு சென்று ரகசியமாக ஆட்களை திரட்டி வருகிறார்கள்.

    ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க சதிதிட்டம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது.

    நீட் தேர்வை பொறுத்தவரை அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் மொத்தம் 4 ஆயிரம் மருத்துவ சீட்டுகள் தான் உள்ளன. இதில் சேர மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் அதை எதிர்க்கட்சிகள் முன்னிலைப்படுத்தாமல் தோல்விகளை மட்டுமே பெரிது படுத்துவது வேதனை அளிக்கிறது.

    குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தன் கடமையை செய்யும். சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தொடர்ச்சியாக பெருநகரங்களில் சங்கிலி பறிப்பு தொடர் கதையாக உள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம், எஸ்.வி.சேகரை இன்னமும் தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. எஸ்.வி.சேகரை கட்சி பணியில் இருந்தும், சில பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்கிவைத்துள்ளோம். எஸ்.வி.சேகர் விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும்’ என்றார். #BJP #SVeShekher #tamilisaisoundararajan
    Next Story
    ×