search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்களை இழந்த மதுரை ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி
    X

    கால்களை இழந்த மதுரை ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி

    காலா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு ஊருக்கு திரும்பியபோது ரெயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்த மதுரையை சேர்ந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி வழங்கினார்.
    சென்னை:

    மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 33). ரஜினிகாந்த் ரசிகரான இவர் மதுரையில் இருந்து காலா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்தார்.

    இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றுகொண்டிருந்தார். சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே ரெயில் சென்றபோது படிக்கட்டில் இருந்து காசி விஸ்வநாதன் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருடைய ஒரு கால் துண்டானது. படுகாயம் அடைந்த காசி விஸ்வநாதன் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய இன்னொரு காலும் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.

    இந்த விஷயம் ரஜினிகாந்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அறிந்து மிகவும் வருந்திய ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகரை தன் சார்பில் காசி விஸ்வநாதனை சந்திக்க அனுப்பி வைத்தார். அவருடன் தென் சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் ராமதாசும் சென்றார்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசி விஸ்வநாதனை சந்தித்து வி.எம்.சுதாகர் நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சை அளிக் கும் டாக்டர்களிடம் காசி விஸ்வநாதன் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். காசி விஸ்வநாதனின் பெற்றோர், மனைவியிடம் ரஜினிகாந்த் சார்பில் நிதி உதவி வழங்கினார்.

    காசி விஸ்வநாதன் மற்றும் அவருடைய குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக ரஜினிகாந்த் சார்பில் வி.எம்.சுதாகர் வாக்குறுதி அளித்தார். #tamilnews
    Next Story
    ×