search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாப்ட்வேர் என்ஜினீயரை அவதூறாக பேசிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
    X

    சாப்ட்வேர் என்ஜினீயரை அவதூறாக பேசிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

    விசாரணை என்ற பெயரில் சாப்ட்வேர் என்ஜினீயரை அவதூறாக பேசிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாபு என்ற சேஷாத்திரி. சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு எனது மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதன்பின்பு, என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் எனது மனைவி அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி விசாரணைக்காக என்னையும், என் குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார். நாங்களும் விசாரணைக்கு சென்றோம். அப்போது இன்ஸ்பெக்டர், எனது மனைவியை நாற்காலியில் அமர வைத்து பேசினார். என்னையும், எனது குடும்பத்தினரையும் நீண்ட நேரமாக நிற்க வைத்து எனது மனைவி முன்னிலையில் என்னை அவதூறாக பேசினார். எனது காலில் காயம் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவது குறித்து இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தபோதும் அவர் என்னை நாற்காலியில் அமர வைக்காமல் வேண்டுமென்றே அவமானப்படுத்தினார். எனவே, இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    Next Story
    ×