search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை - அரசியல் களத்தில் ரஜினி வேகம்
    X

    நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை - அரசியல் களத்தில் ரஜினி வேகம்

    நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதால் புதிய கட்சி தொடங்குவதில் தீவிரமாகி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
    சென்னை:

    ரஜினி உண்மையிலேயே அரசியல் களத்துக்குள் வந்து விட்டாரா? அல்லது காலா படத்துக்காக பாவ்லா காட்டுகிறாரா? என்பது போன்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கின்றன.

    புதுக்கட்சியை தொடங்காமலேயே அரசியல்வாதியாகிவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது இது போன்று ஏகப்பட்ட விமர்சனங்கள். குறிப்பாக தமிழக அமைச்சர்கள் ஆளாளுக்கு ரஜினியை வசைபாடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ரஜினி தனது அரசியல் பாதையை வகுத்து பயணிக்க தொடங்கி விட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

    இதனையெல்லாம் மனதில் வைத்துதான் காலா படப்பாடல் வெளியீட்டு விழாவில் யார் என்ன சொன்னாலும் நான் பின் வாங்கமாட்டேன் என்று எங்கள் தலைவர் பேசினார் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

    மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் கடந்த 4 மாதங்களாக நடந்து முடிந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் அசுர வேகத்தில் நடக்கிறது. கட்சியை தொடங்க வேண்டியது மட்டும்தான் பாக்கி என்பதும் ரஜினி மக்கள் மன்றத்தினரின் குரலாக ஒலிக்கிறது.


    கடந்த டிசம்பர் மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினி அதன் பின்னர் 2 மாதங்கள் தொடர்ந்து அமைதியாகவே இருந்தார். அதற்குள் கமல் புதிய கட்சியை தொடங்கி ஊர் ஊராக செல்ல தொடங்கிவிட்டார். இதனால் என்னாச்சி ரஜினிக்கு? எதுவுமே பேசாமல் இருக்கிறாரே? என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

    இதற்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரஜினி தனது பேச்சில் புலிப்பாய்ச்சலை வெளிப்படுத்தினார்.

    நான் அரசியலுக்கு வந்துள்ளதை பலர் ஏளனம் செய்கிறார்கள். என்னாலும் எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை தர முடியும் என்று பொங்கினார்.

    இதன் பின்னர் அவரது இமயமலை பயணமும் அப்போது அரசியல் பேசாமல் தவிர்த்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 9-ந்தேதி நடந்த காலா விழா ரஜினியின் அரசியல் வேகத்துக்கு மீண்டும் அடித்தளம் அமைத்துள்ளது என்றே கூறலாம்.


    அந்த விழாவில் ரஜினி கூறிய தவளை கதை, தன்னை தினமும் விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்துள்ள பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. ரஜினியை பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவை எதற்குமே ரஜினி பதில் கூறுவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களுக்காகவே தவளை கதையை கூறி தெளிவு படுத்தியுள்ளார் என்கிறார்கள் அவரது கட்சியினர். 3 தவளைகள் மலை ஏறும் போது, சுற்றி நிற்பவர்கள் எல்லாம் அவ்வளவு தூரம் ஏறமுடியாது என்று கூறியதையும் தாண்டி ஒரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டது.

    ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்கவில்லை. இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காமல் செல்ல வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்றே ரஜினி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணியினரின் ஆலோசனைக்கு பின்னர் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ள ரஜினி பெண்களின் ஓட்டுகளை கவரவும் திட்டமிட்டுள்ளார்.

    இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ள ரஜினி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளார்.

    தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலை ஆகியவை ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே வந்துள்ளதாக கூறும் ரஜினி, அதற்காக நகர்த்தி வரும் காய்கள் வெற்றிக் கோட்டை எட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம். #Rajinikanth #RajiniMakkalMandram
    Next Story
    ×