search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழவேற்காட்டில் குழந்தை கடத்தல் பீதியில் மேலும் ஒருவர் கொலை
    X

    பழவேற்காட்டில் குழந்தை கடத்தல் பீதியில் மேலும் ஒருவர் கொலை

    குழந்தை கடத்தல் பீதியில் பழவேற்காட்டில் மேலும் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இருந்து குழந்தைகளை கடத்தி செல்வதற்காக வட மாநிலங்களில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட கும்பல் ஊடுருவி இருப்பதாக “வாட்ஸ்-அப்”பில் சமீபத்தில் தகவல் பரவியது.

    முதலில் இது வதந்தி என்று மக்கள் நினைத்தனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இந்த தகவல் பெரிய அளவில் பகிரப்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

    கோடை விடுமுறை காரணமாக சிறுவர்-சிறுமிகள் வீட்டை விட்டு வெளியில் வந்து விளையாடுவார்கள் என்பதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட மாநில கும்பல்கள் கண்காணித்து கடத்தலில் ஈடுபட உள்ளனர் என்று மக்கள் மத்தியில் பீதி பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இந்த பீதியின் தாக்கம் அதிக அளவு உள்ளது.

    இதனால் தமிழக கிராமங்களில் உள்ளவர்கள், வட மாநில மக்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். வட மாநிலங்களைச் சேர்ந்த பிச்சை எடுப்பவர்கள், மன நோயாளிகள், திருநங்கைகள் மீது மக்களின் பார்வை கோபத்துடன் திரும்பியுள்ளது.

    பீதி, சந்தேகம் காரணமாக ஊருக்குள் வரும் அடையாளம் தெரியாத புதிய நபர்கள் மீது கடந்த சில தினங்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் வட மாநிலத்தவர்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல்கள் நடந்தன. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    ஆனால் குழந்தை கடத்தல் பீதிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட பரிதாபம் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட சென்றபோது தம்புகொட்டான்பாறை என்ற ஊரில் வழி கேட்ட போது அந்த ஊர் மக்களால் “குழந்தையை கடத்த வந்திருப்பவர்” என்று தவறாகக் கருதப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

    உறவினர்களுடன் கோவிலுக்கு சென்ற அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் நெஞ்சை பதறச் செய்யும் வகையில் உள்ளது. வாட்ஸ்அப் பீதியை உண்மை என நினைத்து ஒரு ஊரே காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டது தமிழக மக்களிடம் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ருக்மணி அம்மாள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பரபரப்பு ஓயும் முன்பே நேற்று குழந்தையை கடத்த வந்தவர் என்ற பீதி காரணமாக மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பரிதாப சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-


    பழவேற்காடு பகுதிக்கு நேற்று காலை அடையாளம் தெரியாத ஒரு நபர் வந்தார். அவர் பல்வேறு தெருக்களில் சுற்றித் திரிந்தார். இதனால் அவர் குழந்தையை கடத்திச் செல்ல வந்து இருக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அந்த மர்ம நபரைப் பிடித்து மக்கள் விசாரித்தனர். அதற்கு அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. சரமாரியாக அவரை அடித்து உதைத்தனர்.

    ஏற்கனவே பலவீனமாகக் காணப்பட்ட அந்த நபர் அடி தாங்காமல் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். அவரது உடலை கயிற்றில் கட்டி பழவேற்காடு ஏரி குறுக்கே கட்டப்பட்ட மேம்பால சுவரில் கட்டித் தொங்கவிட்டனர்.

    இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. அவர்கள் பழவேற்காடு ஏரி பாலம் பகுதிக்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபர் கடந்த சில தினங்களாக பழவேற்காடு பகுதியில் சுற்றித் திரிந்ததாக தெரிய வந்தது.

    மேலும் அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் சிலர் கூறினார்கள். அவர் சரியான பதிலை சொல்லாததால்தான் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பாலைவனம் போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    பழவேற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் பொன்னேரிக்குள் சில வட மாநில குழந்தை கடத்தல்காரர்கள் புகுந்து இருப்பதாக பீதி பரவியது. பொன்னேரியில் சில குறிப்பிட்ட இடங்களில் அவர்கள் பதுங்கி இருப்பதாகவும் வதந்தி பரவியது. இது பொன்னேரியில் உள்ளவர்களிடம் பதட்டத்தை அதிகரிக்கச் செய்தது.

    பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள தேவமாநகர் வாணியங்குளத்தில் அப்பகுதி மக்கள் புதர் மறைவில் குழந்தை கடத்தல்காரர்கள் பதுங்கி இருப்பதாக பரவிய தகவலால் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். குளத்தினுள் இறங்கிய இளைஞர்கள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டை நடத்தினர்.

    போக்கஸ் லைட் கட்டி தேடினார்கள். மேலும் குளத்தை சுற்றிலும் பெட்ரோல் ஊற்றி செடிகள் புதருக்கு தீ வைத்து தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து கிராமத்திற்குள் வரும் புதியவர்களை அடித்து உதைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

    இதையடுத்து குழந்தை கடத்தல் பீதி பரவியுள்ள மாவட்டங்களில் மக்கள் மத்தியில் வட மாநிலத்தவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வட மாநில மக்கள் ஊருக்குள் வந்தால் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கும்படியும் போலீசார் வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

    என்றாலும் சமூக வலைத் தளங்களில் பரவியுள்ள குழந்தை கடத்தல் பீதி இன்னும் ஓயவில்லை.
    Next Story
    ×