search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேத்துப்பட்டு பூங்காவில் 7டி தியேட்டர்
    X

    சேத்துப்பட்டு பூங்காவில் 7டி தியேட்டர்

    சென்னை சேத்துப்பட்டு ஏரி பூங்காவில் 7டி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தியேட்டர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏரி 16 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் பசுமை பூங்கா உள்ளது. ஏரியில் படகு சவாரியும் உள்ளது.

    வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குவிந்து படகு சவாரி செய்து வருகிறார்கள். இங்கு கார்களை நிறுத்த 3 அடுக்கு வாகன நிறுத்தும் இடம், குழந்தைகள் பூங்கா போன்றவை உள்ளன.

    சேத்துப்பட்டு ஏரி படகு சவாரி, பூங்காவை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.

    பூங்காவில் உள்ள மீன் அருட்காட்சியக கட்டிடத்தில் தற்போது 3டி நவீன தியேட்டர் உள்ளது. அதில் அனிமே‌ஷன் காட்சிகள், இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய வீடியோக்கள் நவீன முறையில் திரையிடப்படுகின்றன. இதற்காக கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேத்துப்பட்டு ஏரி பூங்காவில் 7டி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தியேட்டர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    600 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த நவீன தியேட்டர் அமைக்கப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கான அனிமே‌ஷன் படக்காட்சிகள், காட்டுக்குள் செல்வது போன்ற உணர்வை தரும் காட்சிகள் திரையிடப்படும்.

    தியேட்டரில் திரையிடப்படும் காட்சிக்குள்ளேயே நாம் இருப்பது போன்ற உணர்வை தரக்கூடிய வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மீன் அருட்காட்சியக அதிகாரி கூறியதாவது:-

    கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. தியேட்டரில் சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யும் பணிக்கு 3 முதல் 4 மாதம் காலம் வரை ஆகும். அதன்பின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தியேட்டர் திறக்கப்படும். தியேட்டரில் காடுகளில் நடக்கும் நிகழ்வுகள் காட்டப்படும். அது பொதுமக்கள் காட்டின் நடுபகுதியில் நின்று பார்ப்பதை போன்ற மகிழ்வை தரும்.

    தற்போது 3டி தியேட்டரில் டைனோசர் மற்றும் காடு சம்பந்தமான படக்காட்சிகள் திரையிடப்படுகின்றன. கோடை விடுமுறை நாட்களில் அதிக பொதுமக்கள் வருவார்கள். அதற்காக மேலும் பல படக்காட்சிகளை சேர்க்க உள்ளோம். சேத்துப்பட்டு பசுமை பூங்காவுக்கு வார விடுமுறை நாட்களில் 1,500 பேர் வருகிறார்கள். வார நாட்களில் 200 பேர் வரை வருகிறார்கள். இந்த பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×