search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு துப்பாக்கி-கள்ளநோட்டு கடத்தல்: தீவிரவாத கும்பல் தொடர்பா?- புழல் கைதியிடம் விசாரணை
    X

    சென்னைக்கு துப்பாக்கி-கள்ளநோட்டு கடத்தல்: தீவிரவாத கும்பல் தொடர்பா?- புழல் கைதியிடம் விசாரணை

    சென்னைக்கு துப்பாக்கி மற்றும் கள்ளநோட்டு கடத்தலில் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    சில நாட்களுக்கு முன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் கள்ள ரூபாய் நோட்டுகளும், கள்ள துப்பாக்கிகளும் கடத்தி வந்த பிரதீப், கமல் என்ற 2 இளைஞர்கள் சென்னையில் பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும், 5 கள்ள துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது. மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் இருந்து அவர்கள் இதை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ரபீக் என்பவர் தான் இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டதும், அவரது திட்டப்படி தான் பிரதீப்பும், கமலும் இந்த செயலில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் திருச்சியில் 2 கள்ளத் துப்பாக்கிகளுடன் சென்னை போலீஸ்காரர் பரமேஸ்வரன், அவரது உறவினர் நாகராஜன் உள்பட 3 பேர் சிக்கினர். அதன் தொடர்ச்சியாக சென்னை அயனாவரம் நம்மாழ்வார் பேட்டையில் பரமேஸ்வரனின் உறவுப் பெண்கள் குப்பு, நாகலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.64 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும், செல்லாத நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது.

    சென்னையிலும் திருச்சியிலும் அடுத்தடுத்து கள்ள நோட்டுகளும், கள்ளத் துப்பாக்கிகளும் சிக்கியது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இரு கும்பல்களுமே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதும், கள்ளத் துப்பாக்கிகளை ரவுடிகளுக்கும், சட்ட விரோத கும்பல்களுக்கும் சப்ளை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இரு கும்பலுக்கும் ஒன்றுக் கொன்று தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ்காரர் பரமேஸ்வரன் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து பலருக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது புதிதாக கள்ள நோட்டு கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் யார்-யாருக்கு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

    இதற்கிடையே சென்னையில் பிடிபட்ட பிரதீப், கமல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தங்களுக்கு கடத்தல் கும்பல் பற்றி தெரியாது. புழல் சிறையில் இருந்தபோது அங்கு அடைக்கப்பட்டு இருக்கும் ரபீக்குடன் நட்பு ஏற்பட்டது. அவர்தான் கள்ள நோட்டு கடத்தலுக்கு திட்டம் போட்டு கொடுத்தார். இதற்காக எங்களுக்கு பணம் கொடுப்பார்” என்று தெரிவித்துள்ளனர்.

    ரபீக் கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுடன் தொடர்பு உடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    ஜாகீர் உசேன் இந்தியாவில் கள்ள நோட்டுகள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு ரபீக் பல வழிகளில் உதவி செய்ததுடன் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக பிடிபட்டார்.

    சிறையில் அடைக்கப்பட்ட பின்பும் அவர் கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்தார். பிரதீப் மூலமாக மீண்டும் கள்ள நோட்டு கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார். இதில் ரபீக்கின் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவர் கணவரை சிறையில் சந்திக்கும்போது கடத்தல் பற்றி பேசி இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரபீக் மனைவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    கள்ள நோட்டு கும்பல் சிக்கினாலும் அவர்களுக்கு இந்த கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்தது யார்? யார் மூலமாக சென்னையில் சப்ளை செய்துள்ளார்கள் என்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சிறையில் இருக்கும் ரபீக்கிடம் விசாரணை நடத்தினால்தான் இதில் தகவல் கிடைக்கும் என்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.

    ரபீக் ஏற்கனவே கள்ள நோட்டு வழக்கில் சிக்கி இருந்தாலும் புதிதாக இந்த வழக்கிலும் அவர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அவரை போலீசார் காவலில் எடுக்க முடியும். இதற்கு அனுமதி கேட்டு போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    ரபீக் பாகிஸ்தான் உளவாளியான ஜாகீர்உசேனுடன் தொடர்பு உடையவர் என்பதால் இதில் தீவிரவாத கும்பலுக்கும் சம்பந்தம் இருக்குமா? என்ற கோணத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம் கள்ள துப்பாக்கிகள் தயாரிப்பின் புகலிடமாக விளங்குகிறது. அருகில் வங்காளதேச எல்லை இருப்பதால் அங்கிருந்து கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவுக்குள் கடத்தி வரும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தீவிரவாதிகள் கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கடத்தி வந்தபோது எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல் கட்டமாக கள்ள நோட்டு மற்றும் கள்ளத் துப்பாக்கி வழக்கு விசாரணை உள்ளூர் போலீசாரிடம் இருந்து சி.பி.சி. ஐ.டி. விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது. அடுத்து ரபீக் இந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்படும். மேலும் தேசிய புலனாய்வு அதிகாரிகளும் இதில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் கள்ள நோட்டு வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    Next Story
    ×