என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருவாயை தக்க வைத்துக் கொள்ள பஸ் கட்டணம் குறைப்பு - புதிய தகவல்கள்
    X

    வருவாயை தக்க வைத்துக் கொள்ள பஸ் கட்டணம் குறைப்பு - புதிய தகவல்கள்

    தற்போது புதிய பேருந்துகளை வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால், மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவும், வருவாயை தக்க வைத்துக் கொள்ளவும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BusFareHike
    சென்னை:

    தமிழக அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டது. கடந்த 20-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

    இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. பொது மக்கள் மற்றும் மாணவ- மாணவிகளும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.

    பஸ் கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில் பொதுமக்கள் அரசு பஸ்களை புறக்கணிக்க தொடங்கினார்கள். மாற்று பயணமாக தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரெயில், ஷேர் ஆட்டோக்களில், மோட்டார் சைக்கிள்களில் செல்லத் தொடங்கினர்.

    இதனால் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு எதிர் பார்க்கப்பட்ட வருமானம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்கவில்லை. பஸ் கட்டணத்தை உயர்த்திய பிறகு தினமும் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.28 கோடி மட்டுமே வசூலானது. அரசு எதிர்பார்த்த ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டது.

    அதே நேரத்தில் மக்களின் தேவையை பயன்படுத்திக் கொண்டு தமிழகம் முழுவதும் 5000 தனியார் பஸ்களும், 3000-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களும் வசூலை குவித்துள்ளன.



    அரசு பஸ்களில் இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாவட்டங்கள், நகரங்களில் இயக்கப்பட்ட தனியார் பஸ்களில் வெறும் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டன. இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ்கள் ஸ்பேர் பஸ்கள் மூலமும் வருமானத்தை குவித்தன.

    ஆம்னி பஸ்களை பொறுத்தவரை கட்டண உயர்வு செய்யப்படவில்லை. அங்கும் பயணிகள் படையெடுத்தனர். இதனால் அரசு பஸ்களில் உடனடியாக சிறிய அளவில் கட்டணம் குறைக்கப்பட்டது.

    இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போது தொடக்கத்தில் 5 சதவீத பயணிகள் புறக்கணித்தாலும் ஓரிரு மாதங்களில் அரசு பஸ்களில் பயணம் செய்ய தொடங்கி விட்டனர். அப்போது பஸ் கட்டண உயர்வு கணிசமாகவே இருந்தது. அரசு பஸ்களில் போதிய வசதிகளும் இருந்தன.

    ஆனால் தற்போது கட்டண உயர்வும் அதிகம், பஸ்களும் மோசமாக உள்ளன. இதனால் பஸ் கட்டணத்தை உயர்த்திய பிறகு 10 சதவீதம் பேர் உடனடியாக புறக்கணித்தனர். மேலும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளது.

    தற்போதைய சூழலில் அரசு பஸ் பயணிகளை தக்க வைத்துக்கொள்ள உடனடியாக புதிய பஸ்களை வாங்கி சேவையின் தரத்தை உயர்த்த முடியாத சூழல் உள்ளது. எனவே மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவும், வருவாயை தக்க வைத்துக் கொள்ளவும் சிறிய அளவுக்கு கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாநகர, நகர பஸ்களில் ஸ்டேஜுக்கு ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. இது கட்டண சுமையை ஓரளவு குறைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BusFareHike
    Next Story
    ×