search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் கண்ணோட்டத்தோடு கவர்னர் செயல்படுகிறார்: அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    X

    அரசியல் கண்ணோட்டத்தோடு கவர்னர் செயல்படுகிறார்: அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

    கவர்னர் அரசியல் கண்ணோட்டத்தோடு அனைத்தையும் பார்க்கிறார் என்று புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என தெரியவில்லை. 10 ஆண்டுக்கு முன் பெற்ற கடனை வட்டியோடு வரும் ஜனவரி 25-ந்தேதி செலுத்த வேண்டும். இதற்காக அரசு ஊழியர் சம்பளம், பல்வேறு திட்ட நிதி ஆகியவற்றை இணைத்து கடனை அடைக்க முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இது தொடருமானால் மாநில வளர்ச்சி முழுமையாக பின்னுக்கு தள்ளப்படும். கடனை அடைக்க முடியாத அரசு என்ற நிலையும் ஏற்படும். நிதி நெருக்கடியை தீர்க்க முதல்-அமைச்சரும், கவர்னரும் உருப்படியான தீர்வு எதையும் காணவில்லை. இதற்காகத்தான் சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகரிடம் கடிதம் அளித்தோம்.

    15 நாளாகியும் இதுவரை சபாநாயகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சபாநாயகர் செயல்பாடு சர்வாதிகாரத்துடன் உள்ளது. எம்.எல்.ஏ. கடிதத்திற்கே பதில் இல்லை. எனவே வேறு வழியின்றி சபாநாயகரை வழிமறித்து பதில் கேட்கும் நிலை ஏற்படும். மாநில அரசுக்கு வர வேண்டிய வருவாயை திட்டமிட்டு ஒரு கும்பல் கபளீகரம் செய்து வருகிறது. இந்த கும்பல் முதல்அமைச்சரை சுற்றி வருகின்றனர்.

    கேளிக்கை வரி கட்ட தேவையில்லை என்று வாய் கூசாமல் பேட்டி அளிக்கின்றனர். 10 ஆண்டுகள் கேபிள் டி.வி. கேளிக்கை வரியை வசூலித்தாலே அரசுக்கு ரூ.100 கோடி கிடைக்கும். வரி ஏய்ப்பு செய்தவர்கள் முதல்-அமைச்சரின் அருகில் இருந்துகொண்டு கேளிக்கை வரியை செலுத்த தேவையில்லை. அதை அரசு நுகர்வோரிடம் வசூலிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி விடுதிகள், ஓட்டல்கள், அரசு இடங்கள் ஆகியவற்றில் நடனம், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த சுற்றுலாத்துறையும், உள்ளாட்சித்துறையும் அனுமதி அளித்துள்ளனர்.

    இங்கு நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். இதற்கு 40 சதவீதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். ஆனால் உள்ளாட்சித்துறை, சுற்றுலா அதிகாரிகளோடு நிகழ்ச்சி நடத்துவோர் கைகோர்த்துக்கொண்டு முறைகேடு செய்கின்றனர். இதனால் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடத்துவோர் போலியாக ரூ.500 என டிக்கெட்டை அரசிடம் கொடுத்து கணக்கு காட்டுகின்றனர்.

    பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என கவர்னர் கூறியுள்ளார். பட்ஜெட் அறிவித்த திட்டங்களையே அரசு செயல்படுத்தவில்லை. அதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எங்கே போனது? கவர்னர் அரசியல் கண்ணோட்டத்தோடு அனைத்தையும் பார்க்கிறார். பொதுத்துறை, கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறாமல் உள்ளனர். ஆனால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவு போடுகிறார். சட்டப்படி அவர்கள் சம்பளம் பெற உரிமையுள்ளவர்கள் என்றும் கவர்னர் கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் கோகுல கிருஷ்ணன் எம்.பி. தினகரனை சந்தித்துள்ளாரே? என்று கேட்டபோது, அது அவருடைய நிலைப்பாடு. நாங்கள் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில்தான் இருக்கிறோம். இரட்டை இலை இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம் என்று கூறினார்.
    Next Story
    ×