என் மலர்

  செய்திகள்

  ஆய்வு பணிக்கு சென்ற கவர்னர் கிரண்பேடிக்கு கறுப்பு கொடி: எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் கைது
  X

  ஆய்வு பணிக்கு சென்ற கவர்னர் கிரண்பேடிக்கு கறுப்பு கொடி: எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆய்வு பணிக்கு சென்ற கவர்னர் கிரண்பேடிக்கு கறுப்பு கொடி காட்டிய எம்.எல்.ஏ. உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

  புதுச்சேரி:

  புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

  சமீப காலமாக கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்யும் இடங்களில் அவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசு திட்டங்களை நிறைவேற்ற விடாமல் முட்டுக் கட்டையாக இருப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

  கடந்த சனிக்கிழமை ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் குப்பம் பகுதிக்கு கவர்னர் செல்ல முயன்ற போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்த அப்பகுதி பெண்கள் திரண்டு இருந்ததால் அப்பகுதிக்கு செல்லாமலேயே பாதி வழியில் ராஜ்நிவாஸ் திரும்பினார்.

  அதுபோல் நேற்று பாகூர் தொகுதிக்குட்பட்ட சோரியாங்குப்பம் கிராமத்தில் உலக ஒற்றுமை தின விழாவையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க கவர்னர் கிரண்பேடி சென்றார்.

  அப்போது கவர்னரை முற்றுகையிட்டு அப்பகுதி பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் கவர்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார்.

  இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை முத்தியால் பேட்டையில் புதிதாககட்டப்பட்டுள்ள மார்க்கெட் கட்டிட வளாகத்தை பார்வையிட செல்வதாக கவர்னர் அறிவித்திருந்தார்.

  இதையறிந்த தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரிமணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன் அதிகாலையிலேயே மார்க்கெட் அருகில் ஒன்று கூடினார்.

  அப்போது காலை 7.25 மணிக்கு கவர்னர் கிரண்பேடி சைக்கிள் மூலம் முத்தியால்பேட்டை மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் கூடியிருந்த அ.தி.மு.க. தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கவர்னருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி கோ‌ஷம் எழுப்பினர்.

  தொகுதியில் நடைபெற இருந்த திட்டங்களை தடுத்து நிறுத்தியதாக அவர்கள் கவர்னருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். தொகுதிக்குள் வராதே, திரும்பிப்போ, திரும்பிப்போ என பதாகைகளை காட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  இதுகுறித்து அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு வேங்கடசாமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து எம்.எல். ஏ.வையும், அவரது ஆதரவாளர்களையும் அங்கிருந்து கலைந்துபோகும் படி கூறினர்.

  அதற்கு வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. எனது தொகுதியில் குடிநீர் தரமற்றதாக உள்ளது. இதை கவர்னர் அருந்துவாரா? என கேட்க வேண்டும். கொண்டுவந்துள்ள குடிநீர் பாட்டிலை கவர்னரிடம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால், போலீஸ் சூப்பிரண்டு இதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதனால் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. மார்க்கெட் வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர்.

  மேலும் போலீஸ் சூப்பிரண்டு வேங்கடசாமி ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது செய்து சிறையில் அடைப்பேன் என்று தகாத வார்த்தைகளை கூறி எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம் செய்தார்.

  இதற்கிடையில் மார்க்கெட் வளாகத்திற்கு வந்த கவர்னர் முன்வாசலில் எம்.எல்.ஏ. மறியலில் ஈடுபட்டதால் அவரை கடந்து சென்று மற்றொரு வாசல் வழியாக மார்க் கெட்டுக்குள் சென்றார்.

  இதையடுத்து போலீசார் வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்களை பிடித்து இழுத்தனர். இதனால் போலீசாருக்கும், எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  போலீசார் எம்.எல்.ஏ. வின் சட்டையைப்பிடித்து இழுத்து தூக்கி தர தர வென இழுத்துச்சென்றனர். ஆதரவாளர்களையும் குண்டுக்கட்டாக இழுத்து சென்று கைது செய்தனர். வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

  கவர்னருக்கு கறுப்பு கொடி காட்டியது ஏன்? என்பது குறித்து வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-


  முத்தியால்பேட்டை தொகுதி கடலை ஒட்டிய பகுதி. ஏற்கனவே நிலத்தடி நீரில் கடல்நீர் உட் புகுந்துள்ளது. தொகுதியில் எங்கும் நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

  இதனால் மத்திய அரசு நிதி மூலம் ரூ.5½ கோடியில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசை வலியுறுத்தி இருந்தேன்.

  இதன்படி திட்டமும் தயாரிக்கப்பட்டு டெண்டரும் கோரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை திடீரென கவர்னர் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். முத்தியால்பேட்டை மார்க்கெட் சேதம் அடைந்து போனதால் புதிய மார்க்கெட் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

  நிதி நெருக்கடி காரணமாக இந்த பணிகள் பல ஆண்டாக நிறைவேறாமல் இருந்தது. எம்.எல்.ஏ.வாக நான் பொறுப்பேற்றவுடன் அரசை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகள் எடுத்தேன். இதன்படி தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

  இந்த நிலையில் கவர்னர் பார்வையிடுவது மார்க்கெட்டை திறக்காமல் இழுத்தடிப்பு செய்வதற்கான வேலையாக இருக்கும் என கருதுகிறோம். எனவேதான் எங்கள் தொகுதி திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கவர்னரை தொகுதிக்குள் வரக்கூடாது என கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×