என் மலர்
செய்திகள்

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு ஜெயில்: ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
ஈரோடு:
கோபி அருகே உள்ள மொடச்சூர் சங்குவார் குட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவருக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆஷாராணி என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.
திருமணமான 6 மாதத்தில் இருந்தே தாய் வீட்டுக்கு சென்று நகை, பணம் வாங்கி வருமாறு கூறி ஆஷாராணியை ரமேஷ் கொடுமைப்படுத்தினாராம். மேலும் சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறத்தி உள்ளார்.
இவற்றை தாங்க முடியாமல் தவித்த ஆஷாராணி 2-7-2014 அன்று சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஷா ராணியை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்த ரமேஷை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு இன்று தீர்ப்பு கூறினார்.
ஆஷாராணியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரமேசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
வரதட்சணை கேட்டு கொடுமை செய்த வழக்கில் ரமேசுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 1000 அப ராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். அடித்து துன்புறுத்திய வழக்கில் ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நாகரத்தினம் வாதாடினார்.






