என் மலர்
செய்திகள்

படகில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராஜாக்கமங்கலம் துறையில் படகில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு குடோனில் ஒப்படைத்தனர்.
புதுக்கடை:
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் பறக்கும் படை அமைத்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், பறக்கும்படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியர், துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ராஜாக்கமங்கலம் துறையில் உடைந்த படகில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை கேரளாவுக்கு கடத்த முயற்சி நடப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே, பறக்கும்படை அதிகாரிகள் ராஜாக்கமங்கலம் துறைக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் சோதனையில் ஈடுபட்ட போது, உடைந்த படகு ஒன்றில் ரேஷன் அரிசி மூடைகள் இருப்பதை கண்டனர்.
பரிசோதித்து பார்த்த போது 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு குடோனில் ஒப்படைத்தனர். இதையடுத்து உடைந்த படகில் ரேஷன் அரிசி பதுக்கியது யார்? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story