search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்ட பெண்கள்
    X

    டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்ட பெண்கள்

    வல்லநாடு அருகே டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் கடை முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. உயர்நீதி மன்றம் உத்தரவின்படி இந்த டாஸ்மாக்கடை பூட்டப்பட்டது. இதனால் அந்த கடையை வல்லநாட்டில் இருந்து கலியாவூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள பைப்லைன் காலனி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த டாஸ்மாக்கடையில் விற்பனைக்காக மதுபாட்டில்களை இறக்கி வைக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது வடவல்லநாடு பஞ்சாயத்திற்குட்பட்ட சேதுராமலிங்கபுரம், பாறைக்காடு, பைப்லைன் காலனியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து டாஸ்மாக்கடை முன்பு அமர்ந்து முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பேச்சு வார்த்தைக்கு உடன்படாமல் பெண்கள் டாஸ்மாக்கடையை அகற்ற உத்தரவிட்டால் மட்டுமே இந்த இடத்தினை விட்டு நகருவோம் என கூறி அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-

    இந்த இடத்தில் சுமார் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தூத்துக்குடி பைப் லைன் செல்லும் இந்த இடத்தில் பொதுமக்கள் குளிக்க பயன்படுத்தும் தொட்டி உள்ளது. இங்குதான் ஊர் பெண்கள் எல்லோரும் குளிக்க பயன்படுத்துவார்கள். ஊருக்கு நுழைவு வாயிலிலான இந்த இடத்தில் தற்போது டாஸ்மாக் கடையை அமைத்துள்ளார்கள்.இதனால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் இங்கு தான் பிரசித்தி பெற்ற வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமி கோயில் அருகில் தான் உள்ளது. எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை வைக்க அனுமதிக்க மாட்டோம். இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் சாதி கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாங்கள் இந்த இடத்தினை விட்டு நகர போவதில்லை. தூத்துக்குடியில் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உங்கள் பகுதியில் கடை திறக்க மாட்டோம் என கூறினார்கள். ஆனால் தற்போது கடை திறக்க ஏற்பாடு செய்து விட்டார்கள்.

    எங்கள் ஊரில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் பஸ் இல்லாத நேரத்தில் இந்த சாலை வழியாகத்தான் நடந்து செல்லவேண்டும். டாஸ்மாக் கடை இந்த இடத்தில் இருந்தால் தொடர்ந்து பிரச்சினை தான் ஏற்படும். எனவே கடையை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    Next Story
    ×