search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதிகாவின் நிறுவன சோதனைக்கும் பணப்பட்டுவாடாவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. அதிகாரிகள்
    X

    ராதிகாவின் நிறுவன சோதனைக்கும் பணப்பட்டுவாடாவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. அதிகாரிகள்

    ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்கும் ராதிகா அலுவலகத்தில் நடந்த சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    நடிகை ராதிகா “ராடன் மீடியா ஒர்க்ஸ்” எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் ராதிகாவின் ராடன் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். பிறகு இது தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து விளக்கம் அளிக்கும்படி ராதிகாவுக்கு உத்தரவிடப்பட்டது.

    அதை ஏற்று ராதிகா நேற்று பிற்பகல் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது ராடன் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கு பற்றி அதிகாரிகள் விவரம் கேட்டு அறிந்தனர்.

    அப்போது ராடன் நிறுவனம் ரூ. 5 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறப்பட்டது. அந்த தகவலை நடிகை ராதிகா மறுத்தார்.

    அவர் கூறுகையில், “நான் வருமான வரித்துறைக்கு 2016-2017ம் ஆண்டுக்கான கணக்கை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டியதுள்ளது. நான் வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை” என்றார்.

    இது தொடர்பாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    ராடன் நிறுவனம் கட்டும் வரி தொடர்பான விசாரணைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்கும் ராதிகா அலுவலகத்தில் நடந்த சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது வேறு. இது வேறு.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    Next Story
    ×