என் மலர்

  செய்திகள்

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது
  X

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.
  சென்னை:

  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.

  சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு, ஏப்ரல் 12-ந்தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா, தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 62 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.

  இந்த தேர்தலில் ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரை பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் வெளியாகியது.

  இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடு, அலுவலகங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையில் பணப்பட்டுவாடா செய்ததற்கான முக்கிய ஆவணங்கள், ரூ.89 கோடி ரொக்க பணம் சிக்கியது.

  இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தது. தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தண்டையார்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்கும் வகையில் 3 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகள் பள்ளியிலேயே அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கப்படுகிறது. 7 துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் 5 ஆயுதப்படை போலீசார் என 12 பேர் ஒரு ஷிப்டுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டப்போதிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.

  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ரத்து செய்யப்பட்டுள்ள தேர்தல் குறுகிய நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதே பள்ளியிலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். மாதக்கணக்கில் தள்ளிப்போகும்பட்சத்தில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் எடுத்துச்சென்று வைக்கப்படும். தேர்தல் ஆணையமே துணை ராணுவத்தினரின் பாதுகாப்பினை விலக்கிக்கொள்வது குறித்து அறிவிக்கும்” என்றனர். 
  Next Story
  ×