search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதம்பிடித்த யானை மிதித்து பாகன் பலி - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    மதம்பிடித்த யானை மிதித்து பாகன் பலி - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

    மார்த்தாண்டம் அருகே இன்று காலை கோவில் திருவிழாவில் பங்கேற்ற யானை மதம்பிடித்து பாகனை மிதித்து கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    குழித்துறை:

    குமரி மாவட்டத்தில் ஏராளமான பிரசித்திபெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் போது சாமி ஊர்வலம் உள்பட நிகழ்ச்சிகளில் அலங்கரிக்கப்பட்ட யானையை பயன்படுத்துவது வழக்கம்.

    இதற்காக கோவில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. யானைகள் இல்லாத கோவில்களில் திருவிழாக்காலங்களில் தனியாரிடம் இருந்து யானையை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவார்கள்.

    இதனால் குமரி மாவட்டத்தில் பல தனியார் உரிய அனுமதிபெற்று யானைகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றை பராமரிக்க பாகன்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த யானைகளை பாகன்கள் கோவில் விழாக்களுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.

    மேலும் இந்த யானைகளுக்கு திடீரென்று மதம் பிடித்து அவை தன்னை பராமரிக்கும் பாகனையே மிதித்து கொல்வது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதும் உண்டு. இதுபோல ஒரு பாகனை யானை மிதித்து கொன்ற பரபரப்பு சம்பவம் மார்த்தாண்டம் அருகே நடந்துள்ளது.

    மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலத்தில் உள்ள சங்கரநாராயண சாமி கோவில் திருவிழா நடந்து வந்தது. இந்த விழாவில் நேற்று ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையை சேர்ந்த ஒரு தனியாருக்கு சொந்தமான யானை கொண்டுவரப்பட்டு திருவிழாவில் பயன்படுத்தப்பட்டது. விழா முடிந்ததை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் அந்த யானையை பாகன் அனந்தமங்கலத்தை சேர்ந்த பிரசாந்த் (வயது 22) என்பவர் உண்ணாமலைக்கடைக்கு நடத்தி சென்றுகொண்டிருந்தார்.

    மார்த்தாண்டத்தை அடுத்த நல்லிக்குளம் பகுதியில் சாலையில் அந்த யானை சென்றுகொண்டு இருந்த போது திடீரென்று அதற்கு மதம்பிடித்தது. இதனால் பயங்கரமாக பிளிறிய அந்த யானையை பாகன் பிரசாந்த் அடக்க முயன்றார்.

    இதனால் அந்த யானையின் கோபம் பாகன் மீது திரும்பியது. தனது தும்பிக்கையால் அவரை தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது. மேலும் தனது தலையாலும் அவரை முட்டி மோதியது. இதனால் ரத்த வெள்ளத்தில் பாகன் பிரசாந்த் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    காலை நேரம் என்பதால் அந்த வழியாக சென்ற பொது மக்கள் கண்முன்பு இந்த கொடூர சம்பவம் நடந்தது. மேலும் அந்த யானை தொடர்ந்து பிளிறியபடி சாலையில் அங்கும் இங்கும் ஓடியதால் பொதுமக்கள் பயந்துபோய் ஓட்டம் பிடித்தனர்.

    இதுபற்றி மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வேறு ஒரு பாகனை அழைத்துக் கொண்டு அங்கு விரைந்தனர். அதற்குள் மதம் பிடித்த யானை தனது அட்டகாசத்தை நிறுத்திக்கொண்டு அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நின்று கொண்டிருந்தது. போலீசாருடன் சென்ற பாகன் சாமர்த்தியமாக செயல்பட்டு இரும்பு சங்கிலி மூலம் அந்த யானையை கட்டிப்போட்டார். இதன் பிறகே அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    யானை மிதித்து பலியான பாகன் பிரசாந்த்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    மார்த்தாண்டம் அருகே கோவில் திருவிழாவின்போது மதம்பிடித்த யானை மிதித்து பாகன் உயிரிழந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    Next Story
    ×