search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டு மனைகள் மீதான உத்தரவு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை: ஐகோர்ட்டு உத்தரவால் சட்ட சிக்கல் நீடிப்பு
    X

    வீட்டு மனைகள் மீதான உத்தரவு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை: ஐகோர்ட்டு உத்தரவால் சட்ட சிக்கல் நீடிப்பு

    வீட்டு மனைகள் மீதான உத்தரவு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாதல் எதிர்காலத்தில் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் விவசாய நிலங்களை எல்லாம் சட்ட விரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி வருவதால், விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருவதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சட்டவிரோதமான வீட்டு மனைகளையும், அந்த மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பத்திரப்பதிவு செய்ய கூடாது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும், வீடுகளையும் வாங்கியவர்கள் என்று பலர் மனுதாக்கல் செய்தனர்.

    இதற்கிடையில், தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தில், கொண்டு வரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இந்த அரசாணையில், ‘2016ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்த அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் கட்டப்பட்ட வீடுகளை மறுபத்திரப்பதிவு செய்யலாம். அதாவது, மறு விற்பனை செய்யலாம். ஆனால், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான வீட்டு மனைகளையும், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், இந்த அரசாணையை ஐகோர்ட்டு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஏற்கவில்லை. அங்கீகாரமில்லாமல் உருவாக்கப்பட்ட சட்டவிரோதமான வீட்டு மனைகளை எப்படி அரசு வரையறை செய்யப் போகிறது? என்பது குறித்து கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பான ஒருங்கிணைந்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    ஆனால், இந்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவே இல்லை. இந்த நிலையில், கடந்த மார்ச் 28-ந்தேதி இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி டீக்காரராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது போது, தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி பிறப்பித்த அரசாணையை ஏற்றுக் கொண்டனர்.

    இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த விரிவான உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-



    அக்டோபர் 20-ந்தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மறு விற்பனை செய்யலாம் என்று கூறியுள்ளது.

    தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும், வீடுகளையும் அப்பாவிகள் பலர் வாங்கி விட்டனர். அவர்கள் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் தற்போது சிரமப்படுவதால், இப்படி ஒரு திருத்தத்தை தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    இதை ஏற்றுக்கொண்டு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்கின்றோம். அதாவது, அக்டோபர் 20-ந்தேதி பிறப்பித்த அரசாணையின்படி, தமிழக அரசு பத்திரப்பதிவுகளை மேற்கொள்ளலாம்.

    அதேநேரம், இதுவரை விற்பனை செய்யப்படாத அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஆகியவற்றை பொறுத்தவரை தமிழக அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கும் வரை பொறுத்திருக்கவேண்டும். அதேநேரம், இந்த உத்தரவுகள் அனைத்தும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.

    இவ்வாறு நீதிபதிகள் அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    இந்த தீர்ப்பின் அடிப்படையில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், வீடுகளை தற்போது விற்பனை பத்திரப் பதிவு செய்யப்பட்டாலும், இவை எல்லாம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்று நீதிபதிகள் கூறியுள்ளதால், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு உள்ளான சிக்கலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் மீதான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஒருவேளை இறுதி தீர்ப்பு எதிராக அமைந்தால், இந்த அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×