search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுன்சிலர்கள் இல்லாமல் ரூ.5680 கோடிக்கு தாக்கலான சென்னை மாநகராட்சி பட்ஜெட்
    X

    கவுன்சிலர்கள் இல்லாமல் ரூ.5680 கோடிக்கு தாக்கலான சென்னை மாநகராட்சி பட்ஜெட்

    மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இல்லாமல் ரூ.5680 கோடிக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பராமரிப்பு பணிகள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சென்னை மாநகராட்சி பட்ஜெட் மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சில நேரங்களில் முன்னதாக தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி மேயர், ஆணையர் முன்னிலையில் மாநகராட்சி நிலைக்குழுவின் நிதி தலைவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

    இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட் எவ்வித பரபரப்பும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இல்லாமல் பட்ஜெட் தாக்கலானது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து விட்டது. உள்ளாட்சி தேர்தல் இது வரையில் நடத்தப்படாததால் அதிகாரிகள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. கடந்த மார்ச் மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.5680 கோடிக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததால் இத்தகவல் வெளியிடப்படவில்லை.

    மாநகராட்சியின் நிதி ஆலோசகர் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் நிலைக்குழு (நிதி) தலைவராக மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) செயல்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    தனி அதிகாரி (ஆணையர்), மேயர் பொறுப்பில் இருந்து பட்ஜெட்டை ஏற்றுக் கொண்டுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அடுத்து வரும் மன்ற கூட்டத்தின்போது பட்ஜெட் விவரங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஏப்ரல் மாதத்தில் இருந்து மாநகராட்சி அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். மேலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு பராமரிப்பு பணிகள், தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதற்கு நிதி தேவை. பட்ஜெட் தாக்கல் செய்தால் மட்டுமே நிதி பெற முடியும். அதனால் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இல்லாமல் அந்தந்த துறைகளுக்கான நிதியை ஒதுக்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×