என் மலர்
செய்திகள்

திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி:
தமிழகத்தில் போதிய மழையின்மையால் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் குடிநீருக்காகவும், பிற உபயோகத்திற்கும் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அல்லாடி வருகிறார்கள்.
சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால் நகர் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் பல மைல் தூரம் சென்று தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகிறார்கள். மாற்று நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து தினம் தினம் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடந்து வருகின்றன.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்து சமத்துவபுரம் பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் சமத்துவபுரம் எதிரே காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கட்சியினரும், பொதுமக்களும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதே போன்று புத்தாநத்தம் பகுதியில் கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் ஒரு இடத்தில் தண்ணீர் தொட்டி அமைத்து தருவதாக கூறி அதுவும் அமைத்து கொடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் திடீரென மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் புத்தாநத்தம் பள்ளிவாசல் அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மருததுரை சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் புத்தாநத்தம் போலீசாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்திலும் இதே குடிநீர் பிரச்சினை தொடர்ந்து நிலவுகிறது. பெரம்பலூர் அருகே செட்டி குளத்தை அடுத்த ரெங்க நாதபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து ஒரு பகுதிக்கு முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். பின்னர் விரைந்து வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
இதேபோல் எளம்பலூர் சமத்துவபுரம் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. பலமுறை அப்பகுதியினர் அதிகாரிகளிடம் முறை யிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் இன்று காலை வடக்குமாதேவி சாலையில் காலிகுடங்களுடன் பெண்கள் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்தனர்.
வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை கிராமத்தில் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து இன்று காலை சாலை மறியல் நடந்தது.
மேலும் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை யும் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் நீடித்த மறியல் கைவிடப்பட்டது.






