என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகப்பட்டினம் அருகே, எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
    X

    நாகப்பட்டினம் அருகே, எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது

    நாகப்பட்டினம் அருகே, எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் காவல் படை வீரர்கள் தென்னிந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஐ.சி.ஜி.எஸ்.- அமயா, ஐ.சி.ஜி.எஸ்.-ராணி துர்க்காவதி, சி-415, சி-422 உள்ளிட்ட நவீன ரோந்து கப்பல்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் ‘அருனவேஷ்’ என்ற ரோந்து கப்பல் மூலம் இந்திய கடலோர காவல் படையினர் நாகப்பட்டிணம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நாகப்பட்டிணத்தில் இருந்து கிழக்கே 50 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் இலங்கை மீனவர்கள் 10 பேர், எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை மீனவர்களை, இந்திய கடலோர காவல் படையினர் சிறைப்பிடித்தனர்.

    இதுகுறித்த தகவலின்பேரில் காரைக்கால் கடலோர காவல் படையினர் சி-415 ரோந்து கப்பலில் விரைந்து சென்று ‘அருனவேஷ்’ கப்பலில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேரையும் கைது செய்து நேற்று மதியம் காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, கமாண்டர் பட்நாயக்கிடம் ஒப்படைத்தனர்.

    இலங்கை மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைதொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின்னர் இலங்கை மீனவர்கள் 10 பேரும் நாகப்பட்டிணம் தமிழக கடலோர பாதுகாப்புக்குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கமாண்டர் பட்நாயக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை திரிகோண மலையை சேர்ந்த மதுஷன் (வயது27) என்பவருக்கு சொந்தமான ‘மனோஜ்’ என்ற விசைப்படகில் அவருடன் கவின்ந்ரா(29), அசென்(20), கோசலன்(20), தனன்பலன் (57) ஆகிய 5 பேர் கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதியும், லட்சுமண்(29) என்பவருக்கு சொந்தமான ‘கலனபுதா’ என்ற விசைப்படகில் அவருடன் நலின்டா(25), சுரேஷ்(29), சமன்(39), சமரா (29) ஆகியோர் கடந்த 3-ந் தேதியும் திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் நாகப்பட்டிணத்திற்கு கிழக்கே 50 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையினர், இலங்கை மீனவர்களை மடக்கிப் பிடித்து காரைக்கால் கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். இவர்கள் காரைக்கால் கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு பின்னர் நாகப்பட்டிணம் கடலோர பாதுகாப்புக்குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய 2 படகுகள் மற்றும் அதில் இருந்த 400 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய எல்லைக்குள் வெளிநாட்டினர் ஊடுருவுவதை தடுக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களில் சமன் என்பவர் மாற்றுத்திறனாளி ஆவார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் திரிகோணமலையில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டோம். எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் காற்று மற்றும் அலைகளின் ஓட்டத்தில் எதிர்பாராமல் இந்திய எல்லைக்குள் நுழைய நேரிட்டது. அச்சமயத்தில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் எங்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர் என்று கூறினார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் மீது இலங்கை கடல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கழுத்தில் குண்டு பாய்ந்து பிரிட்ஜோ என்ற மீனவர் பரிதாபமாக இறந்தார். இலங்கை கடல் படையினரால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்திய கடலோர காவல் படை அதிரடி நடவடிக்கை எடுத்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×