என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய, மாநில அரசுகள் மீது நெடுவாசல் மக்கள் அதிருப்தி
    X

    மத்திய, மாநில அரசுகள் மீது நெடுவாசல் மக்கள் அதிருப்தி

    அறவழியில் நடக்கும் நெடுவாசல் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க காரணம் என்ன? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    நெடுவாசலில் மட்டும் தொடங்கிய இந்த போராட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் பரவியது. அத்துடன் இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படும் வாணக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.



    மாணவர்கள், இளைஞர்கள், அதிக அளவிலான பெண்கள், திரைத்துறையினர் ஆதரவுடன் போராட் டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது. தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோரும் நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்து ஆதரவு அளிப்பதால் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரமானது.

    நேற்று நடந்த போராட்டத்தில் வடகாட்டில் பெண்கள் கும்மியடித்தும், நெடுவாசலில் ஒப்பாரி வைத்தும், புரட்சியாளர் இளைஞர் எழுச்சி மாணவர் இயக்கம் சார்பில் பாடை கட்டி போராட்டமும் நடத்தினர். அத்துடன் நெடுவாசல் கிராமத்தில் இரவில் அனைத்து வீடுகளின் முன்பும் பெண்கள் அகல் விளக்கேற்றி ஹைட்ரோ கார்பன் திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்த போதிலும் இதனை கைவிட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மத்திய மந்திரி, கலெக்டர், ஓ.என். ஜி.சி. அதிகாரிகள் தலைமையிலான பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

    பிரச்சினைக்கு தீர்வு என்பது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று நெடுவாசல் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியதால் மத்திய, மாநில அரசுகள் இறங்கி வந்தன. ஆனால் நெடுவாசல் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகளும், அதிகாரிகளும் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.



    எந்த வித அசம்பாவிதத்திற்கும் இடமளிக்காமல், அறவழியில் நடத்தி வரும் நெடுவாசல் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க காரணம் என்ன? விவசாயத்தையும், தொழிலையும் விட்டு, விட்டு நடத்தி வரும் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் அரசு மவுனம் காப்பது ஏன் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதேநிலை தொடர்ந்து நீடித்தால் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து போராட்டக்குழுவை கொண்டு ஆலோசனை நடத்தி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும், இதுபோன்ற செயல்களால் மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தினமும் நெடுவாசலுக்கு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கிராம மக்கள் சார்பிலும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் நிதியுதவியுடனும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் அங்கு ஏராளமான போலீசார் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
    Next Story
    ×