என் மலர்
செய்திகள்

கிருஷ்ணகிரியில் நடமாடும் ஆய்வக வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் நடமாடும் ஆய்வக வாகனத்தை மாவட்ட கலெக்டர் கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து கலெக்டர் கூறியதாவது:– தனியார் நிறவன பங்களிப்போடு மக்கள் பயன்படும் வகையில் கிராமங்களுக்கு சென்று 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் உடல் நல பரிசோதனைகள் செய்து பயன்பெறும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் இந்த நடமாடும் ஆய்வகம் செயல்பட உள்ளது.
தற்போது முதன் முதலில் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நடமாடும் ஆய்வகம் மூலம் ரத்தத்தின் அளவு, ரத்தத்தின் வகை, எச்.ஐ.வி., சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, கிரியேட்டினின் அளவு, மலேரியா பரிசோதனை, சளி பரிசோதனை, சிறுநீரில் சர்க்கரை, உப்பு, மஞ்சள் காமாலை, கர்ப்பம் உறுதி செய்யும் பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், காவேரிப்பட்டணம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிராம், மருத்துவ அலுவலர் சோமசுந்தரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.