என் மலர்
செய்திகள்

பட்டுக்கோட்டையில் நகை கடையில் கொள்ளை
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் நகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் லாக்கர் மற்றும் கண்காணிப்பு கேமிரா உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்து பாலமுருகன் கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேற் கூரையும் உடைக்கப்பட்டிருந்தது.
கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 1 கிராம், ½ கிராமினால் செய்யப்பட்டிருந்த தோடு, மோதிரம் உள்ளிட்ட 150 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.மேலும் அங்கிருந்த வெள்ளி சந்தன பேழை, குடம், குத்து விளக்கு உள்ளிட்ட 5 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்களும் திருடப்பட்டது.கடையின் உள்ளே வைத்திருந்த கண்காணிப்பு கேமிராவின் ரிக்கார்டரையும் காணவில்லை. அதனையும் கொள்ளையர்கள் எடுத்து சென்று விட்டனர்.
கொள்ளை குறித்து கடை உரிமையாளர் பாலமுருகன் பட்டுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிங்கார வேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
தடய அறிவியல் நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.