என் மலர்
செய்திகள்

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மூலம் 21 ஆண்டுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என திமுகவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணித்து விட்டதால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒவ்வொருவருக்கும் தலா 10 ரூபாய் வரை அபராதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியானதால் 10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் முதல்வராகும் வாய்ப்பை சசிகலா இழந்துள்ளார்.
தமிழக அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது குறித்து அரசியல் மற்றும் சட்ட வல்லுநர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை பார்ப்போம்.
தீர்ப்பு குறித்து மு.க. ஸ்டாலின் கூறியதாவது,
21 ஆண்டுக்கு பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்கும். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
சூழ்நிலை கருதி நல்ல முடிவினை திமுக எடுக்கும். நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையினை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சசிகலா உள்ளிட்டோர் ஏற்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்கள் தேர்வு செய்ய்யக்கூடிய நபரை முதல்வராக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மூலம் நீதி வென்றுள்ளது என ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
இதோடு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மூலம் தமிழக அரசியலில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது என பா.ஜ.க.வின் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story