search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளை அருகே மாடு முட்டி இறந்த விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
    X

    பாளை அருகே மாடு முட்டி இறந்த விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

    பாளை அருகே மாடு முட்டி இறந்த விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படத்தியது.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடந்தது. செய்துங்கநல்லூரில் இருந்து புளியங்குளம் வரை நடந்த போட்டியில் பெரிய மாட்டு வண்டி பந்தயம், சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு மாட்டு வண்டி திடீரென பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார் குளத்தை சேர்ந்த விவசாயி அந்தோணிசாமி (வயது60) என்பவரை வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடு முட்டி தள்ளியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிச்சாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மாடு முட்டி பலியான அந்தோணி சாமியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று மாலை நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்தோணிசாமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏ.டி.எஸ்.பி. கந்தசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்றும் 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும், செய்துங்கநல்லூரிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே அந்தோணி சாமியின் உறவினர் மனுவேல் என்பவர் செய்துங்கநல்லூர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் மாட்டு வண்டி பந்தயத்தின் போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முதலுதவிக்கு போட்டிக்கான பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்யவில்லை. மேலும் விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை. எனவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

    அதன் பேரில் போலீசார் மாட்டு வண்டி பந்தய பொறுப்பாளரான செய்துங்கநல்லூரை சேர்ந்த ராஜ்பாண்டியன் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அந்தோணி சாமியின் உறவினர்கள் மற்றும் நாட்டார்குளம், வசவப்பபுரம், முத்தாலங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் செய்துங்கநல்லூரில் உள்ள நெல்லை-திருச்செந்தூர் சாலையில் இன்று மதியம் 11.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் அந்தோணிசாமி குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×