என் மலர்

  செய்திகள்

  கூவத்தூரில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்: ஆட்கொணர்வு வழக்கில் வக்கீல் வற்புறுத்தல்
  X

  கூவத்தூரில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்: ஆட்கொணர்வு வழக்கில் வக்கீல் வற்புறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூவத்தூரில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஐகோர்ட்டில் நேரடியாக ஆஜர்படுத்த வேண்டும் என ஆட்கொணர்வு வழக்கை தாக்கல் செய்துள்ள வக்கீல் வற்புறுத்தியுள்ளார்.

  சென்னை:

  ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

  இருவரும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். இதனால் கடந்த 8 நாட்களாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

  ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் சென்னையை அடுத்த கூவத்தூரில் ‘கோல்டன் பே ரிசார்ட்’ சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  கடந்த 6 நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதியிலேயே தங்கி இருக்கிறார்கள்.

  இந்நிலையில் கடந்த 10-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் சட்ட விரோதமாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியை சேர்ந்த வக்கீல் இளவரசன், தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘குன்னம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஆர்.டி.ராமச்சந்திரன், கடந்த 8-ந்தேதி சென்னையில் நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்றார். அதன்பின்னர் அவரை காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

  இதுபற்றி விசாரித்த போது, ராமச்சந்திரன் உட்பட அ.தி.மு.க.வை சேர்ந்த 130 எம்.எல்.ஏ.க்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்து இருப்பதாகவும் காஞ்சீபுரம் மாவட்டம், கூவத்தூர் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  எனவே, சட்டவிரோதமாக சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உட்பட 130 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களையும் இந்த ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த கூவத்தூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

  அதேபோல, கிருஷ்ணராஜபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அவரது உறவினரான வக்கீல் வி.பிரீத்தா என்பவர் தனியாக ஒரு ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

  இந்த 2 மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது மனுதாரரின் வக்கீல், ‘சட்டவிரோதமாக எம்.எல்.ஏ.க்களை சிலர் சட்ட விரோதமாக சொகுசு விடுதியில் பிடித்து வைத்துள்ளனர். இந்த சட்டவிரோத சிறைபிடிப்பதில் இருந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. தப்பி வந்து விட்டார். இதன்பின்னர் தான் எம்.எல்.ஏ.க்கள் சிறைப் பிடிப்பு உண்மை வெளியில் தெரியவந்துள்ளது.

  தற்போது, பல எம்.எல். ஏ.க்கள் சாப்பிடாமலும், தண்ணீர் கூட குடிக்காமலும் உள்ளனர். அவர்களுக்கு உணவு உடனடியாக வழங்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களின் செல்போன்கள் எதுவும் செயல்படக்கூடாது என்பதற்காக அந்த சொகுசு விடுதியில் ‘ஜாமர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியை பொருத்த வேண்டும் என்றால் உள்துறை செயலாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும். அனுமதி எதுவும் இல்லாமல், இந்த கருவி அப்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது’ என்றார்.

  மேலும், ‘சட்டவிரோத பிடியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு நாட்டு நடப்பு எதுவும் தெரியக்கூடாது என்பதற்காக டி.வி. பார்க்கவும், செல்போனை பயன் படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை.

  எனவே, காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டை அங்கு அனுப்பி, எம்.எல்.ஏ.க்கள் நிலை குறித்து விசாரித்து, இந்த ஐகோர்ட்டுக்கு இன்றே தெரிவிக்கும்படி உத்தரவிடவேண்டும்’ என்று அந்த வக்கீல் வாதிட்டார்.

  இதை கேட்ட நீதிபதிகள், ‘எம்.எல்.ஏக்கள் அனைவரும் எம்.எல்.ஏ. விடுதியில் சுதந்திரமாக தங்கியிருப்பதாக அரசு வக்கீல் தெரிவித்து இருந்தார். ஆனால், அங்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்பது தெரியவருகிறது. அப்படியானால், தற்போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கு உள்ளனர்?’ என்று கேள்வி எழுப்பினர்.

  அதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், ‘எம்.எல்.ஏ. விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தெரிவித்தது தவறு. அதை ஊடகங்கள் தவறாகவும், திரித்தும் செய்திகளை வெளியிட்டு விட்டன. தற்போது எம். எல்.ஏ.க்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

  அதுகுறித்து தற்போது நான் கருத்து ஏதாவது தெரிவித்தால், அதையும் ஊடகங்கள் பெரிதுப்படுத்தி விடுவார்கள். எனவே, இதுகுறித்த விவரங்களை ‘பார்ட்டியிடம்’ கேட்டு தெரிவிக்கிறேன்’ என்று பதிலளித்தார்.

  அதற்கு நீதிபதிகள், ‘பார்ட்டியிடம் கேட்டு சொல்ல போகிறீர்களா?’ என்று ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டு, ‘எம்.எல்.ஏ.க்கள் பொது பதவியை வகிப்பவர்கள். நீங்கள் அரசு வக்கீல். அப்புறம் எப்படி பார்ட்டியிடம் (ஒரு அரசியல் கட்சியிடம்) கேட்டு தெரிவிப்பதாக கூறுகிறீர்கள்?’ என்று கருத்து தெரிவித்தனர்.

  அதற்கு அரசு வக்கீல், ‘நான் பார்ட்டி என்று சொன்ன இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை தான்’ என்று பதிலளித்தார்.

  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘எம்.எல்.ஏக்கள் குறித்து அரசு தரப்பிடம் கருத்து கேட்டு அரசு வக்கீல் இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கவேண்டும். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர், காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு, கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்புவதாக உத்தரவிட்டனர்.

  இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் செய்யூர் தாசில்தார் ராமச்சந்திரன், காஞ்சீபுரம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் ஆகியோர் கூவத்தூர் விடுதிக்கு நேரில் சென்று எம்.எல்.ஏ.க்களிடம் 5 மணி நேரம் தனித்தனியாக விசாரித்தனர்.

  அப்போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாங்கள் சுயமாக விருப்பத்தின் பேரிலேயே தங்கி இருப்பதாக வெள்ளை பேப்பரில் எழுதி கொடுத்தனர்.

  இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு இன்று நடைபெற்றது.

  அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ராஜரத்தினம். மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் கே.பாலு, பிரீத்தா ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், இரு எம்.எல்.ஏ.க்கள் கைப்பட எழுதிக் கொடுத்த கடிதங்களங்களும் முத்திரையிடப்பட்ட உரையுடன் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

  நீதிபதிகள்:- எம்.எல்.ஏ.க் களை ஆஜர்படுத்த கோரி அவர்களது வாழ்க்கை துணைவர்கள், குழந்தைகள் யாரும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வில்லையே ஏன்?

  வக்கீல் பாலு:- தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏ. சிறை பிடிப்பு குறித்தும், அவர்கள் காணாமல் போனது குறித்தும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  ஆனால், போலீசார் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். வேண்டுமென்றால், தமிழக டி.ஜி.பி.யிடம் எத்தனை புகார்கள் இதுவரை தமிழகம் முழுவதும் வந்துள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்ய சொல்லுங்கள். அனைத்து உண்மைகளும் வெளியில் வந்து விடும்.

  நீதிபதிகள்:- இப்போது 2 எம்.எல்.ஏ.க்களும் தாங்கள் சட்டவிரோத காவலில் இல்லை என்று மறுத்து கடிதம் கொடுத்துள்ளனரே?

  பாலு:- கூவத்தூர் சொகுசு விடுதியில், ஏராளமான ரவுடிகள் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த ரவுடிகள் அப்பகுதியில் வசிப்பவர்களையும், பத்திரிகையாளர்களையும் அடித்து உதைத்து விரட்டுகின்றனர்.

  இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளனர். அரசு அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அரசியல் ரீதியான காரணங்கள் எதற்கும் நான் போக வில்லை. 130 எம்.எல். ஏ.க்கள் ஏன் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்? சென்னை மாநகரிலும், எம்.எல்.ஏ. விடுதியும் அவர்களுக்கு பாதுகாப்பான இடம் தான். எதற்காக கல்பாக்கம் அருகே அவர்களை பிடித்து வைக்க வேண்டும்.

  அதனால், அங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ள 130 எம்.எல்.ஏ.க்களையும் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும். நீதிபதிகள் நேரில் அவர்களிடம் விசாரியுங்கள். அதன்பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்து விடுங்கள்.

  அரசு வக்கீல்:- கவர்னர் கூட இதுவரை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வரிசையில் ராஜ்பவனுக்கு வாருங்கள் என்று உத்தரவிட வில்லை. ஆனால், மனுதாரர் வக்கீல் எம்.எல்.ஏ.க்களை ஆஜராக உத்தரவிட வேண் டும் என்று கோரிக்கை விடுவது ஏற்புடையது அல்ல. எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக உள்ளனர். நேற்று கூட சசிகலா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அருகில் இருந்தனர்.

  தற்போது கூவத்தூரில் 119 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் சட்டவிரோத பிடியில் எதிலும் இல்லை.

  பாலு:- அப்படியானால் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்து, அந்த எம்.எல்.ஏக்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும்.

  அரசு வக்கீல்: அதுதேவையில்லாதது. ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டால், இதுகுறித்து அரசின் கருத்தை நான் கேட்கவேண்டும். நான் யாரிடம் இந்த கருத்தை கேட்பேன்? எனக்கு சிரமம் ஏற்படும்.

  (இதையடுத்து நீதிபதிகள் வக்கீல்கள் என அனைவரும் சிரித்து விட்டனர். பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது விட்டது என்று வக்கீல்கள் சிலர் கூறினர்)

  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தர விட்டனர்.

  Next Story
  ×