என் மலர்

  செய்திகள்

  கிரிக்கெட் போட்டியைபோல் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பட்டம் வழங்க வேண்டும்: ஸ்டாலின்
  X

  கிரிக்கெட் போட்டியைபோல் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பட்டம் வழங்க வேண்டும்: ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிசுகள் வழங்குவதை போல், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பட்டம் வழங்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  சென்னை:

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

  தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கழக ஆட்சிக் காலத்தில் தடையின்றி நடைபெற்றன.

  பின்னர் வந்த அ.தி.மு.க அரசின் அலட்சியமான செயல்பாடுகளும் நீதிமன்ற உத்தரவுகளும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடையை ஏற்படுத்திய நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அலங்காநல்லூர் பாலமேடு தொடங்கி தமிழகத்தின் பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் தடைபட்டன.

  மெரினாப் புரட்சி எனும் வரலாற்றுப் பெருமைமிக்க போராட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்று, அதனைத் தமிழகம் தழுவிய மக்கள் போராட்டமாக மாற்றினர். மத்திய, மாநில அரசுகள் இணங்கி வந்து ஜல்லிக்கட்டுக்கான சட்டம் இயற்றின.

  போராடி கிடைத்த வெற்றியினைக் கொண்டாடும் வகையில்தான் பிப்ரவரி 10-ந் தேதி அன்று அலங்காநல்லூரில் உற்சாகத் திருவிழாவாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

  இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது தடைகளைத் தகர்த்து, இளைஞர்களின் பேரார்வத்துடன் நடைபெறும் போட்டிகளைக் காணும் ஆர்வத்துடன் சென்றேன்.

  மாநிலத்தை ஆள்பவர்கள் மல்லுக்கட்டுப் போட்டியில் மூழ்கியிருந்த நிலையில், அரசியல் சாயமில்லாத தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அலங்காநல்லூரில் சிறப்பாக நடந்தன. வாடிவாசல் திறக்கப்பட்டு சீறி வந்த காளைகளையும், அதன் மீது பாய்ந்து அடக்கிய காளையர்களையும் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது.

  மனிதனுக்கும் விலங்குகளுக்குமான உறவை விளக்கும் விளையாட்டாக அந்தப் போட்டிகளைக் காண முடிந்தது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றிய நிலையில், இந்தப் போட்டிகள் சமத்துவ ஜல்லிக்கட்டாக நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தை கடிதமாக எழுதியிருந்தேன். அந்த விருப்பம் நிறைவேறியதையும் அலங்காநல்லூரில் காண முடிந்தது. சாதி ஏற்றத் தாழ்வுகளற்ற விளையாட்டுப் போட்டியாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

  காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கே விளையாட்டு காட்டி அவர்களின் பிடியிலிருந்து தப்பித்த காளைகளை வளர்த்தவர்களுக்கும் பரிசு வழங்கும் வாய்ப்பையும் அலங்காநல்லூர் மக்கள் எனக்கு அளித்தார்கள். தடைகளைத் தகர்த்து நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு கிடைத்தவை ஊக்கப் பரிசுகள் தான். அதனை உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டனர்.

  வெள்ளந்தியான மனதுடன் இருக்கும் அந்த மக்களைப் பார்த்த போது, இத்தகைய வீரமிக்க பண்பாட்டு விளையாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

  கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேன் ஆப் த மேட்ச் என்று பட்டம் வழங்கி பரிசளிக்கப்படுகிறது. அதுபோல நமது மண்ணின் பெருமை சொல்லும் ஏறுதழுவதல் போட்டியில் பங்கேற்கும் வீரமிக்க இளைஞர்களுக்கும் காளைகளை வளர்ப்போருக்கும் அனைவரும் கவனிக்கும் படியான பெருமைமிக்க பட்டங்களும் பரிசுகளும் வருங்காலத்தில் தரப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

  அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதியளித்து, ஜல்லிக்கட்டு நடைபெற காரணமாக இருந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,
  Next Story
  ×