search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்தால் உயிருக்கு ஆபத்து: சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
    X

    ஓ.பன்னீர்செல்வத்தால் உயிருக்கு ஆபத்து: சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

    ஓ.பன்னீர்செல்வத்தால் உயிருக்கு ஆபத்து என சொகுசு விடுதியில் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதி சாலையில் வைத்து கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது இருவரும் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் நாங்கள் இங்கு தங்கவில்லை என்றும், முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்கள் மிரட்டியதாலேயே இங்கு தங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை கூறினார்கள்.

    இது தொடர்பாக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    யாருடைய விருப்பத்தின் பேரிலும் நாங்கள் இங்கு தங்கவில்லை. எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்கள். இதன் காரணமாகவே இங்கு வந்து தங்கியுள்ளோம்.

    ஓ.பன்னீர்செல்வம் எப்போதுமே அம்மாவுக்கும் கட்சிக்கும் விசுவாசமானவராக இருந்ததில்லை. இதனை தெரிந்து கொண்டே அவரது மகன் பதவியை அம்மா பறித்தார்.

    சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்- அமைச்சராக பதவி ஏற்பதற்காக கவர்னர் நிச்சயம் அழைப்பு விடுப்பார். இந்த வி‌ஷயத்தில் கவர்னர் அரசியல் செய்வதாக நாங்கள் நினைக்கவில்லை.

    எனவே கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததும் முதல்-அமைச்சராக சசிகலா பொறுப்பு ஏற்பார். எங்களை கைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறானது.

    ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுள்ள சுந்தரம் எம்.பி., நத்தம் விசுவநாதனின் ஆதரவாளர். மற்றொரு எம்.பி. அசோக்குமார் கே.பி. முனுசாமியின் ஆதரவாளர். அவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க.வில் இருப்பது போன்று அதிகார மையங்கள் அ.தி.மு.க.வில் இல்லை. அ.தி.மு.க.வில் சசிகலா மட்டுமே எங்களை வழி நடத்தும் ஒரே தலைவராக உள்ளார். 2-வது தலைமைக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை. அம்மாவின் வழியில் கட்சியையும், ஆட்சியையும் சசிகலா வழி நடத்தி செல்வார். ஆளுனரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் அனைவருமே சசிகலாவுக்கு ஆதரவாகவே இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×