search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வள்ளிமலை கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 பெண்களிடம் 23 பவுன் நகை பறிப்பு
    X

    வள்ளிமலை கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 பெண்களிடம் 23 பவுன் நகை பறிப்பு

    வள்ளிமலை கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 பெண்களிடம் 23 பவுன் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனையொட்டி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்கள்போல் புகுந்த மர்ம நபர்கள் 5 பெண்களிடம் நகைகளை பறித்து விட்டு தப்பியுள்ளனர்.

    மேல்பாடியை அடுத்த பள்ளேரி கிராமத்தை சேர்ந்த லட்சுமி (வயது 45) அணிந்திருந்த 7½ பவுன் சங்கிலி, கோட்டநத்தம் பகுதியை சேர்ந்த முனியம்மா(65) அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலி, முத்தரசிக்குப்பம் பகுதியை சேர்ந்த அமுதா (45) என்பவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, எருக்கம் பட்டு பகுதியை சேர்ந்த ரேவதி (23) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, திருவலத்தை அடுத்த கொண்டாரிபள்ளி பகுதியை சேர்ந்த துளசியம்மா (65) அணிந்திருந்த 3½ பவுன் சங்கிலி என மொத்தம் 23½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர்.

    இவர்கள் கும்பாபிஷேகத்தின்போது கைகளை கூப்பி பரவசத்துடன் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் இவ்வாறு தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக பொன்னை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ராஜாங்கம் மற்றும் மேல்பாடி போலீசார் விசாரணை நடத்தி கும்பாபிஷேக விழாவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×