search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய ‘பட்ஜெட்’ மாற்றம், ஏமாற்றமாக அமைந்து இருக்கிறது: மு.க.ஸ்டாலின்
    X

    மத்திய ‘பட்ஜெட்’ மாற்றம், ஏமாற்றமாக அமைந்து இருக்கிறது: மு.க.ஸ்டாலின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய பட்ஜெட் மாற்றம், ஏமாற்றமாக அமைந்து இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் 2017-18-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பல அறிவிப்புகளை தாங்கி வந்திருப்பது போல் காட்சியளித்தாலும், இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கான முயற்சிகள் ஏதும் பெரிய அளவில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

    திறன் மேம்பாட்டு பயிற்சி மட்டுமே பிரதானமாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து வேறு முக்கிய வேலை வாய்ப்பு அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் தென்படவில்லை.

    தமிழகத்திலும், நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை இன்றைக்கு விவசாயிகள் கடன் வாங்கும் நிலைமையில் இல்லை என்பதுடன், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மட்டுமே இப்போதைக்கு தவிக்கிறார்கள் என்பதையும் புலப்படுத்துகிறது.

    விவசாயிகள் தற்கொலை கவலையளிக்கிறது. இதைத் தடுக்க தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கருத்து தெரிவித்த பிறகும் கூட விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    வளர்ச்சியின் பயன் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பது இந்த நிதிநிலை தயாரிப்பின் முக்கிய நோக்கம் என்று நிதிநிலை அறிக்கையின் முகப்புரையிலே சுட்டிக்காட்டியிருக்கும் நிதி மந்திரி அருண் ஜெட்லி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது வேதனையளிக்கிறது.

    இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்கப்போகிறோம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் கற்றுக்கொண்ட திறமை குறித்து ஆய்வு செய்ய ஒரு திட்டம் கொண்டு வரப்படும் என்று நிதி மந்திரி அறிவித்துள்ளார்.

    புதிய கல்வி கொள்கையின் வரைவு நகலுக்கு ஏற்கனவே தி.மு.க.வின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களை மேல் வகுப்பிற்கு செல்லவிடாமல் தடுக்கவும், பள்ளிகளை மூடவும் வழி வகுக்கும் அந்த புதிய கல்வி கொள்கை வரைவு நகலுக்கு நிதி மந்திரியின் இந்த அறிவிப்பு மறைமுகமாக உதவும் வகையில் அமைந்து விடக்கூடாது என்று சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதும், இதன் பாதிப்பு, சிரமங்கள் 52 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். ஆனால் இப்போது நிதிநிலை அறிக்கையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகள் அடுத்த வருடம் இருக்காது என்று நிதி மந்திரி கூறியிருப்பது, பிரதமரின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது.

    அதுமட்டுமின்றி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய எவ்வித சீர்திருத்த நடவடிக்கைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை தாங்கி வரவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. இது நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முழுமையாக பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, அந்த பணியில் பெண்களை அதிகமாக ஈடுபடுத்தும் நோக்கம், வீடு இல்லாதவர்களுக்கு 2019-ம் வருடத்திற்குள் 1 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கும் அறிவிப்பு, 50 ஆயிரம் கிராமங்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச்சலுகை, அரசியல் கட்சிகளின் நிதியாதாரங்கள் குறித்த சீர்திருத்தம் போன்றவை வரவேற்கப்பட வேண்டியவை.

    அதே நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, நதிநீர் இணைப்பு திட்டம், மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம், வர்தா மற்றும் வறட்சி நிவாரண நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக மத்திய நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை தமிழக மக்களுக்கு “மாற்றமும், ஏமாற்றமும்” உள்ள அறிக்கையாக அமைந்திருக்கிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
    Next Story
    ×