என் மலர்
செய்திகள்
தேனி மாவட்டத்தில் சாரல் மழை: பல மாதங்களுக்கு பிறகு மூலவைகை ஆற்றில் நீர்வரத்து
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவுகூட கடந்த வருடம் பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டது.
இதனால் பெரியாறு, வைகை ஆகிய அணைகளின் நீர்மட்டம் குறைந்தபடி இருந்தது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
வருசநாடு வனப்பகுதியில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் பல மாதங்களுக்கு பிறகு மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
மேலும் மூலவைகையாற்று படுகையில் உள்ள குமணன்தொழு, கோம்பை தொழு, கூட்டு குடிநீர்திட்ட உறை கிணறுகளில் தண்ணீர் சுரப்பு ஏற்பட்டுள்ளதால் கடமலை, மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட 16 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பொதுமக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
சாரல் மழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்ந்துள்ளது.
நேற்று காலை 60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 73.79 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 37 கன அடி தண்ணீர் வருகிறது. 3 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 25.36 அடி. அணைக்கு வரும் 40 கன தண்ணீர் முழுவதும் மதுரை குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 111 அடியை எட்டியுள்ளது. வரத்து 468 கன அடி. திறப்பு 100 கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 34.10 அடி.
பெரியாறு 2.2, தேக்கடி 3.8, கூடலூர் 2.5, சண்முகாநதி அணை 3, உத்தமபாளையம் 3.6, வைகை அணை 1.2, கொடைக்கானல் 2.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.