search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயப்பேட்டை அடகு கடையில் கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் தப்பிய 2 ராஜஸ்தான் வாலிபர்கள்
    X

    ராயப்பேட்டை அடகு கடையில் கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் தப்பிய 2 ராஜஸ்தான் வாலிபர்கள்

    சென்னை ராயப்பேட்டை அடகு கடை அதிபரின் கடையில் நேற்று பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை முயற்சியில் சிக்கிய கொள்ளையன் ரவிகாந்த் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் வசித்து வந்த முன்னாலால் என்ற அடகு அதிபரின் கடையில் நேற்று பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி நடை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அடகு கடையில் வேலை செய்து கொண்டிருந்த வனிதா என்ற பெண்ணையும் முன்னாலாலையும் துப்பாக்கியால் மிரட்டிய 3 பேர் கொண்ட கும்பல் 500 பவுன் நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.

    ஆனால் வேலைக்கார பெண் வனிதா துணிச்சலாக செயல்பட்டு கூச்சல் போட்டதால் துப்பாக்கி காட்டி மிரட்டிய வாலிபர் ரவிகாந்த் சிக்கினான். இவன் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவன்.

    அவனுடன் வந்த 2 கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவன் ரவிகாந்த் வைத்திருந்தது போல துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளான்.

    இதனால் கொள்ளையர்கள் ராயப்பேட்டையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதுபோல வேறு எங்கும் கைவரிசை காட்டி விடக்கூடாதே என்கிற அச்சம் போலீசாரிடம் உள்ளது. இதனை தொடர்ந்து தலைமறைவான கொள்ளையர்கள் இருவரையும் தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் ராயப்பேட்டை உதவி கமி‌ஷனர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    இதற்கிடையே துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களுடன் சிக்கிய கொள்ளையன் ரவிகாந்த் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த பிஜுனும், அவனது நண்பனும்தான் சென்னைக்கு வரச் சொன்னார்கள். இதன்படி உத்தரபிரதேசத்தில் இருந்து மும்பை வந்த நான், அங்கிருந்து பெங்களூர் சென்றேன். பெங்களூரில் இருந்து நேற்று காலையில்தான் சென்னை வந்தேன். அவர்கள்தான் என்னை ராயப்பேட்டையில் உள்ள முன்னாலால் கடைக்கு அழைத்து சென்றனர். அவர்கள் வெளியில் துப்பாக்கியுடன் காத்திருந்தனர். நான் உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றேன். அப்போதுதான் சிக்கிக் கொண்டேன். மற்றபடி இதற்கு திட்டம் தீட்டியது எல்லாம் அவர்கள்தான்.

    இவ்வாறு ரவிகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளான்.

    இருப்பினும் அவன் சொல்வது உண்மைதானா? என்பது பற்றி அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் நேற்று இரவே ரவிகாந்தை சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரும் சிக்கியவுடன் ரவிகாந்தை காவலில் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×