என் மலர்

  செய்திகள்

  தைப்பூசத்துக்கு விடுமுறை கேட்ட வழக்கு தள்ளுபடி
  X

  தைப்பூசத்துக்கு விடுமுறை கேட்ட வழக்கு தள்ளுபடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தைப்பூசத்துக்கு விடுமுறை கேட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
  சென்னை:

  திருப்பூரை சேர்ந்தவர் ஏ.அண்ணாதுரை. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

  சமூக சேவைகள் பல செய்து வருகிறேன். நான் ஒரு முருக கடவுளின் பக்தன். கடவுள் முருகன், தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுவார். தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று தென்மாநிலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், தென்ஆப்பிரிக்கா, மியான்மர், இலங்கை என்று வெளிநாடுகளிலும் ஏராளமான முருக பக்தர்கள் உள்ளனர். முருக கடவுளின் முக்கிய விழாக்களில், தைப்பூசமும் ஒன்று. தை மாதம் பவுர்ணமி அன்று தைப்பூசம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தைப்பூச விழாவுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.

  ஆனால் தமிழகத்தை பொருத்தவரை வடமாநில பண்டிகைகளான, கிருஷ்ண ஜெயந்தி, ஆயுதபூஜை, ராம நவமி, துர்காஷ்டமி, காளி பூஜை, சரஸ்வதி பூஜை, லட்சுமி பூஜை போன்ற பண்டிகைகளுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. ஆனால், தமிழ் கடவுளான முருக கடவுளுக்கு உகந்த நாளான தைப்பூசத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

  இத்தனைக்கும் தைப்பூசம் அன்று பழனிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள். ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள், திருத்தணிக்கு பாத யாத்திரையாக வருவார்கள்.

  தமிழகம் முழுவதும் உள்ள முருகர் கோவிலில் தைப்பூச விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை விடுவதில்லை.

  மேலும் 2017ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 14ந் தேதி அரசாணை வெளியிட்டது. இதில், பிப்ரவரி 10ந் தேதி நடைபெற உள்ள தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கவில்லை. இதையடுத்து தைப்பூசத்துக்கு விடுமுறை அறிவிக்கும்படி தமிழக தலைமை செயலாளருக்கு, கடந்த நவம்பர் 21ந் தேதி மனு அனுப்பினேன்.

  இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, ராமநவமி, துர்காஷ்டமி, ஆயுதபூஜை, கிருஷ்ணஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பொது விடுமுறை விடுவது போல, தைப்பூசத்துக்கும் விடுமுறை விட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

  இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார்.

  அப்போது நீதிபதிகள், ‘தைப்பூசத்துக்கு சிங்கப்பூர், மலேசியாவில் விடுமுறை விடுவதாக கூறுகிறீர்கள். அந்த நாட்டில் ஆண்டுக்கு எத்தனை பொது விடுமுறை விடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?’ என்று கேட்டனர்.

  அதற்கு வக்கீல், ‘எனக்கு அந்த விவரம் தெரியாது. ஆனால் தமிழ் கடவுள் முருகனின் முக்கிய விசே‌ஷமான தைப்பூசத்துக்கு தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள். அன்று பொது விடுமுறை விடவேண்டும் என்று தான் கேட்கிறோம்’ என்று பதிலளித்தார்.

  இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள். அதற்கு வக்கீல், ‘எங்களது கோரிக்கையை பரிசீலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டால் போதும்’ என்றார்.

  இதையும் ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
  Next Story
  ×