search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்ட கலவரத்தில்  ஆட்டோவுக்கு தீவைத்த பெண் போலீஸ் சிக்கினார்
    X

    ஜல்லிக்கட்டு போராட்ட கலவரத்தில் ஆட்டோவுக்கு தீவைத்த பெண் போலீஸ் சிக்கினார்

    ஜல்லிக்கட்டு போராட்ட கலவரத்தில் ஆட்டோவுக்கு தீவைத்த பெண் போலீசும், வாகனங்களை சேதப்படுத்திய போலீஸ்காரரும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் 2 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந்தேதி மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மெரினா கடற்கரையில் சமூக வலைதளங்கள் மூலமாக லட்சக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடினர். இவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும், பொதுமக்களும் போராட்ட களத்தில் குதித்தனர். இதனால் மெரினா கடற்கரையே திணறியது.

    இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை கடந்த 23-ந்தேதி கொண்டு வந்தது. அதன் பின்னரும் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனால் மெரினாவில் குவிந்திருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், கோயம்பேடு, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் கலவரம் வெடித்தது. இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

    மெரினாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் எந்தவித வன்முறை சம்பவங்களும நடைபெறாத நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களிலேயே சமூக விரோத கும்பல் ஊடுருவி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.

    போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டதுடன் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் கடந்த திங்கட்கிழமை சென்னை மாநகரில் பல இடங்கள் போர்க்களம் போல காட்சி அளித்தன.

    இதற்கிடையே கலவரத்தை பயன்படுத்தி போலீசாரே பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் போலீஸ் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், போலீஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ பதிவுகளாக பரவின. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய இதுபோன்ற வீடியோக்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.



    இது தொடர்பாக பேட்டி அளித்த சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்ட 300 பேர் வரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.

    கலவரத்தை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ் மீதும், வாகனங்களை சேதப்படுத்திய போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

    இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண் போலீசும், போலீஸ்காரரும், யார் என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    பெண் போலீசும், போலீஸ்காரரும் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறிச் சென்றது எப்படி? என்பது பற்றிய போட்டோ ஆதாரங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் வாலிபர் ஒருவர் தனது மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் பின்லேடன் படத்தை பொறித்துள்ளார். இந்த மோட்டார்சைக்கிளில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக 2 வாலிபர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒருவர் மோடியின் முகமூடியை அணிந்துள்ளார். அவரது கழுத்தில் செருப்பு மாலை தொங்க விடப்பட்டுள்ளது.

    இன்னொரு படத்தில் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. “இந்தியாவை விட்டு தமிழ்நாடு பிரிந்தால் இந்தியாவே ஒற்றைக்காலில்தான் நிற்க வேண்டும் - தயங்க மாட்டோம்” என்கிற வாசகங்கள் உள்ளன.

    இதன் மத்தியில் இந்திய வரை படத்தில் இருந்து தமிழ்நாட்டை தனியாக பிரித்து வைத்திருப்பது போன்றும் படம் வரையப்பட்டுள்ளது.

    இது போன்று தேச விரோத செயல்களில் பலர் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாகவே ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×