search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் தமிழகத்தில் பரவலாக மழை: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
    X

    தென் தமிழகத்தில் பரவலாக மழை: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    நெல்லை:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதியில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் பலத்த மழை கொட்டியது.

    குற்றாலம், பாபநாசம் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிக அளவில் இருந்தது.

    தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. பாபநாசத்தில் 9 செ.மீ., அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, தென்காசியில் 2 செ.மீ. மழை பதிவானது.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பலத்த மழை கொட்டியது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் பரவலாக மழை பெய்தது. விளாத்தி குளத்தில் 3 செ.மீ. மழை பதிவானது.

    குமரி மாவட்டத்தில் சில தினங்களாக மேகமூட்டமாக காட்சி அளித்தாலும் மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.

    கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று லேசாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை இருந்தது. இப் பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. குன்னூரில் 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

    நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்தன. ஏற்கனவே வறட்சியால் பல இடங்களில் நெற்பயிர்கள் கருகிய நிலையில், தற்போது அறுவடை செய்யும் நேரத்தில் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வந்தது. நேற்று மதியம் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    திருச்சியில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மதியம் லேசாக மழைத்தூறல் இருந்தது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கருமேகங்கள் மட்டுமே சூழ்ந்து காணப்பட்டன. மழை பெய்யவில்லை.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மறைந்து விட்டது. இதனால் இன்று (திங்கட்கிழமை) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×