search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிர் கடனை திருப்பி கேட்டு வங்கி நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தற்கொலை
    X

    பயிர் கடனை திருப்பி கேட்டு வங்கி நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தற்கொலை

    பயிர் கடனை திருப்பி கேட்டு வங்கி நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. பயிர் கருகியதால் விவசாயிகள் பலர் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்தும் இறந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் வறட்சி பாதிப்பினால் விவசாயிகள் உயிரை பறித்தது.

    திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் மேல் சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). விவசாயி. இவரது மனைவி இந்திரா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    ராஜ்குமார் சில மாதம் முன்பு ஆதமங்கலம்புதூரில் உள்ள ஒரு வங்கியில் பயிர் கடனாக ரூ.45 ஆயிரம் பெற்றுள்ளார். அதன் மூலம் 1½ ஏக்கரில் உளுந்து பயிரிட்டிருந்தார். ஆனால், மழையின்றி உளுந்து பயிர் கருகியது.

    இதனால் ராஜ்குமார் மனமுடைந்தார். இந்த நிலையில் பயிர் கடனை திருப்பி கேட்டு வங்கி நிர்வாகம் நெருக்கடி கொடுத்தது. மேலும் ராஜ்குமாருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவரின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

    ஒரு மாதத்திற்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தா விட்டால் நிலம் ஜப்தி செய்யப்படும் எனவும் வங்கி தரப்பில் கெடு விதித்ததாக புகார் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜ்குமார், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பயிர் கடனை திருப்பி கேட்டு தற்கொலைக்கு தூண்டியதாக வங்கி மீது ராஜ்குமாரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வருவாய்த்துறை மற்றும் கடலாடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×