என் மலர்
செய்திகள்

ஜஸ்அவுஸ் அடகு கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: ஒருவர் பிடிபட்டார்
சென்னை:
சென்னை ஐஸ்அவுஸ் ஜானிஜான்கான் தெருவை சேர்ந்தவர் முனிலால். இவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
இவரது நகைகடையும் வீடும் ஒன்றாக உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.
காலை 10 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் முனிலால் வீட்டிற்குள் புகுந்தது. 25 வயதுக்குட்பட்ட அந்த வாலிபர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர். மர்ம நபர்கள் முனிலால் மற்றும் அவரது மனைவியை துப்பாக்கியால் மிரட்டி கயிறால் கட்டிப் போட்டனர்.
நகை-பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் கொள்ளை கும்பல் மிரட்டியதை பார்த்து வேலைக்கார பெண் வனிதா கூச்சலிட்டார். உடனே கொள்ளையர்களின் ஒருவன், சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று அவரது வாயில் துப்பாக்கியை விட்டு மிரட்டியுள்ளான்.
கொள்ளை கும்பலிடம் சிக்கிய நகைக் கடை அதிபர் குடும்பத்தின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் வீட்டிற்கு சென்றார். அவரை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவரை தள்ளிவிட்டும் ஓட முயற்சித்தனர். அதற்குள் அவர் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவனை மட்டும் பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
இதையடுத்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் ஓடிவந்தனர். உடனே 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசாரிடம் பிடிபட்ட வாலிபரை பொது மக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
துப்பாக்கி முனையில் நகை-பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிபட்ட வாலிபரின் பெயர் ரவி. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவன். அவனிடம் இருந்து துப்பாக்கி, 2 அரிவாள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் சரியான நேரத்தில் வந்ததால் நகை, பணம் தப்பியதோடு உயிர் இழப்பும் தவிர்க்கப்பட்டது.