search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: திருநாவுக்கரசர்
    X

    உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: திருநாவுக்கரசர்

    உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த உடன் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில், கட்சியின் பொருளாளர் நாசே ஜெ.ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். போட்டிகளுக் கான ஏற்பாடுகளை பெரம்பூர் நாசர் செய்திருந்தார். முன்னதாக சு.திருநாவுக்கரசர் முன்னிலையில், திருவொற்றியூரை சேர்ந்த த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    விழா முடிவில் சு.திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விலங்குகள் நலவாரியம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஒருபுறம் மனு தாக்கல் செய்வதும், மற்றொருபுறம் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுக்கொள்வோம் என்று கூறுவதும் மக்களை ஏமாற்றும் செயல். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிங்வி ஜல்லிக்கட்டுக்கு எதிராகவோ, தமிழக மக்களுக்கு எதிராகவோ வழக்காடவில்லை என அவரே பேட்டி அளித்துள்ளார்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் நிலையத்தை தீ வைத்ததாக தி.மு.க.வினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. யார் உண்மையில் சம்பந்தப்பட்டுள்ளனரோ அவர்களை தான் கைது செய்ய வேண்டும். இதுகுறித்து தி.மு.க. சார்பில் நீதி விசாரணை கோரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் என்றும், கட்சிக்கு வி.கே.சசிகலா என்றும் அ.தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், எனக்குள்ள சந்தேகம் இந்த இரண்டையும் பா.ஜனதா கட்சியும், மத்திய அரசும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்குகிறதோ என்பது தான். தமிழகத்தில் பா.ஜ.க. எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழகத்தில் வேரூன்ற முடியாது.

    பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தும், அ.தி.மு.க. எம்.பி.க்களை சந்திக்காமலும் அ.தி.மு.க.வுக்குள் பிரித்தாளும் முயற்சியை செய்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தபோது, தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவந்தோம். அதேபோன்று, இப்போதும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×