என் மலர்
செய்திகள்

கோவையில் இன்று கல்லூரி மாணவர் விபத்தில் பலி
கோவை:
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் அருண் (வயது 22). இவர் கோவை அவினாசி ரோடு நவஇந்தியாவில் உள்ள கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது தம்பி ஸ்ரீராம். தம்பியுடன் இன்று மதியம் அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.
நவ இந்தியா சிக்னல் அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அருண் மற்றும் அவரது தம்பி கீழே விழுந்தனர்.
இதில் அருணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்ரீராம் லேசான காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லேசான காயம் அடைந்த தம்பி ஸ்ரீராமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.