என் மலர்
செய்திகள்

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற 3 போலீஸ்காரர்களை கொல்ல முயற்சி: தந்தை-மகன் கைது
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள மெய்தவாயல் ஏரியில் மணல் கொள்ளை நடப்பதாக மீஞ்சூர் போலீசுக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீஸ்காரர்கள் விஜயகுமார், ராமதாஸ் ஆகியோர் மீஞ்சூர் அருகே உள்ள கல்பாக்கத்தில் இரவு 2 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மெய்தவாயல் ஏரியில் இருந்து ஒரு டிராக்டரில் மணல் ஏற்றி வந்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மீஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறினார்.
பின்னர் 2 மோட்டார் சைக்கிளில் போலீஸ்காரர்கள் செல்ல மணல் டிராக்டர் பின்னால் சென்றது.
சிறிது தூரம் சென்றதும் மணல் கொள்ளையர்கள் டிராக்டரை வைத்து மோட்டார் சைக்கிளை இடித்து கொல்ல முயன்றனர். உடனே 3 போலீசாரும் அருகில் உள்ள பள்ளத்தில் குதித்து உயிர் தப்பினர். டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் மீஞ்சூர் காலனியை சேர்ந்த மோகன், கோகுல் என்பதும், அவர்கள் தந்தை-மகன் என்பதும் தெரியவந்தது. மணல் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.