search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிரட்டல் கடிதம்
    X
    மிரட்டல் கடிதம்

    கோவை விமான நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்?: போலீசார் விசாரணை

    கோவை விமான நிலையத்துக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து சைபர் கிரைம் மூலம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை விமான நிலையத்துக்கு நேற்று ஒரு மர்ம கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், எச்சரிக்கை என தலைப்பிட்டு கோவை விமான நிலையத்தை குண்டுகள் வைத்து தகர்ப்போம் என கூறப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    எங்களை போன்ற இடை நிலைய ஆசிரியர்களுக்கு முக்கிய கோரிக்கையான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தற்போது உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர எங்கள் இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை மாநில அரசு ஏற்கவேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு இருக்கும் கோபத்தில் கோவை விமான நிலையத்தை குண்டுகள் வைத்து தகர்ப்போம். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்காளர் அடையாள அட்டையையும் ஒப்படைப்போம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

    இந்த கடிதத்தை பாஸ்கரன், சந்திரசேகரன், கவுரி ஆகியோர் எழுதி இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த கடிதம் குறித்து விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி சுமதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடிதத்தில் ஒரு செல்போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டிருந்தது. கடிதம் கோவை அண்ணா நகர் முதல் தெருவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அந்த முகவரி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்துக்கு வந்துள்ள மிரட்டல் கடிதம் போன்று ஏற்கனவே மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கும் வந்துள்ளன. மிரட்டல் கடிதம் எழுதியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    அண்ணா நகர் முதல் தெரு என குறிப்பிடப்பட்டுள்ள முகவரி போலியாக இருக்கலாம் என தெரிகிறது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண் குறித்து சைபர்கிரைம் மூலம் விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    பயணிகளின் உடமைகள் மற்றும் பார்வையாளர்கள் வரும் வாகனங்கள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பேக், பொருட்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×