search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வற்புறுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்: ஓ.பன்னீர் செல்வம்
    X

    ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வற்புறுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்: ஓ.பன்னீர் செல்வம்

    ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசினார். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
    சென்னை:

    ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறியதாவது:-

    22.1.2017 அன்று இப்போராட்டத்தை முன் நின்று நடத்தி வந்தவர்களுள் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில், இப்போராட்டத்தை தேச விரோதிகளும், வி‌ஷமிகளும், சமூக விரோதிகளும் கையிலெடுத்து கொண்டு விரும்பத்தகாத கோரிக்கைகளை முன் வைப்பதாகவும், தேசிய கொடியை எரிப்பதாகவும், போராட்டத்தை திசை திருப்புவதாகவும் தெரிவித்ததோடு, மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் கூறியிருந்தார்.

    மேலும், அன்று மாலை ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பெரியவர் அம்பலத்து அரசர், ராஜேஷ், ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதி ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், இவர்கள் தான் இந்த போராட்டத்திற்கு பத்தாண்டுகளாக போராடி இந்த போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தவர்கள், 2006லிருந்து இப்போது நடைபெறும் போராட்டத்திற்கும் இவர்கள் தான் அடிப்படை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து போராட்டம் வெற்றி பெற்றது என்றும், அனைவரும் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.

    போராட்டத்தில் பல்வேறு தேச விரோத அமைப்புகளைச் சார்ந்தவர்கள், வி‌ஷமிகள், சமூக விரோதிகள் ஊடுருவி, அமைதியாக நடைபெற்று வந்த பேராட்டத்தில் வன்முறையில் ஈடுபடவிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், 23.1.2017 அன்று காலை முதல் காவல் துறையினர், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் துறையினர் மெரினா கடற்கரை நோக்கி வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எவரும் மெரினா நோக்கி வராமல் தடுத்து, மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு நேரடியாகவும், ஊடகங்கள் மற்றும் ஒலி பெருக்கி மூலமாகவும் கேட்டுக் கொண்டதையடுத்து, சுமார் 10,000 பேர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்து அமைதியான முறையில் கலைந்து சென்றனர். எனினும், சுமார் 2,000 பேர் மட்டும் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், சட்ட விரோத கும்பல் ஒன்று ஐஸ் அவுஸ், பெசன்ட் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலைகளில் காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறி, காவல் துறையினரை தள்ளிக் கொண்டு கடற்கரைக்குச் செல்ல முற்பட்ட போது, தடுத்தும் கேளாமல், காவல் துறையினர் மீது கற்களை வீசி தடுப்பை உடைத்துக் கொண்டு முன்னேறியதால், காவல் துறையினர் தகுந்த எச்சரிக்கைக்கு பின் குறைந்தபட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை உபயோகித்தும் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

    மேலும், மற்றொரு சட்ட விரோத கும்பல் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்குள் புகுந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதில் தீ பிடித்து, காவல் நிலையத்திலுள்ள பொருட்கள் மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து, சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும், 31 இரண்டு சக்கர வாகனங்களும், ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவும் எரிந்து சேதமடைந்தன.

    சென்னை, நடுக்குப்பத்தில் சட்டவிரோத கும்பல் ஒன்று கூடி மெரினா நோக்கி செல்ல முற்பட்ட போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தும் அக்கும்பல் கலைந்து செல்லாமல் காவல் துறையினர் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது. இச்சம்பவத்தில், நடுக்குப்பம் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த தற்காலிக பந்தல்கள் 20, ஒரு டெம்போ டிராவலர், நான்கு ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. காவல் துறையினர் அவர்களை கலைந்து போகச் சொல்லி எச்சரித்தும் கேட்காமல், அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், காவல் துறையினர், தக்க எச்சரிக்கைக்கு பின்பு, குறைந்தபட்ச பலத்தை உபயோகித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

    ஜாம்பஜார், பாரதி சாலையில் சட்டவிரோத கும்பல் ஒன்று, காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தது. காவல் துறையினர் உரிய எச்சரிக்கை விடுத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், தகுந்த எச்சரிக்கைக்கு பின் கண்ணீர் புகையை உபயோகித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

    இச்சம்பவத்தில் பொதுமக்களின் எட்டு வாகனங்கள் தீயில் கருகின. சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நாயர் பாலத்தில் சட்டவிரோத கும்பல் ஒன்று மறியலில் ஈடுபட்டு வந்தது குறித்து தகவலறிந்து சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் அங்கு சென்ற போது, அவரது அரசு வாகன ஓட்டுநரைத் தாக்கி, அவ்வாகனத்திற்கு தீ வைத்தனர். இச்சம்பவத்தில் காவல் வாகனம் முற்றிலும் எரிந்து போனது.

    சென்னை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டு காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், அப்பகுதியிலிருந்த மூன்று டாஸ்மாக் கடைகளை சூறையாடியது. இதே போன்று வடபழனி நூறடி சாலையில், சட்டவிரோத கும்பல் ஒன்று வடபழனி காவல் ஆய்வாளரின் வாகனத்திற்கு தீ வைத்தது.

    சென்னை, அரும்பாக்கம் நூறடி சாலையில் சட்ட விரோத கும்பல் ஒன்று, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தையும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களையும் தாக்கி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டெம்போ டிராவலர் காவல் வாகனம் மற்றும் தீயணைப்புத் துறை வாகனம் ஒன்றையும் தீ வைத்து சேதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடைக்கும் தீ வைத்தனர்.

    மேலும், சென்னை, மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் அருகேயுள்ள புறக்காவல் உதவி மையத்தினை சட்டவிரோத கும்பல் ஒன்று சேதப்படுத்திவிட்டு, அங்கு இருந்த இரண்டு காவல் வாகனங்களை தீ வைத்து எரித்தது.

    சென்னையில் சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்ட போது காவல் துறையினர் அவர்களை கலைக்க மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி, அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, கொட்டிவாக்கம், கே.கே.நகர், கிண்டி, ஓட்டேரி, ஜாம்பஜார், விருகம்பாக்கம் உட்பட 76 இடங்களில் மொத்தம் 12,500 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கலைந்தனர்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
    Next Story
    ×