என் மலர்
செய்திகள்

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே விபத்து: மாணவர் பலி
சேலம்:
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார். இவரது மகன் ரத்தீஷ் (வயது 21). இவர் மகுடஞ்சாவடி அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கட்டிடக்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சேலம் 5 ரோடு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ரத்தீஷ் இன்று காலை 11 மணியளவில் புதிய பஸ் நிலையம் நோக்கி வந்தார்.
அப்போது புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது சாலையின் குறுக்காக சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் நிலைதடுமாறிய ரத்தீஷ் பின்னால் பெங்களூரில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையம் நோக்கி வந்த பஸ்சுக்குள் விழுந்தார். இதில் முதுகு பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக துடி துடித்து இறந்தார்.
ரத்தீசின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒடோடி வந்தனர். பின்னர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.