என் மலர்
செய்திகள்

ஏற்காட்டில் லேசான சாரல் மழை
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பருவ மழை போதிய அளவு கை கொடுக்காததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் நேற்று சீதோஷ்ண நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு வானில் கருமேகங்கள் திரண்டன. இதையடுத்து மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையாம்பட்டி மற்றும் கரியகோவிலில் 5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காட்டில் 4.2, கெங்கவல்லி 3.2, ஆனைமடுவு 2, ஆத்தூர் 1.8, சேலத்தில் 2 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் கடுங்குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் நேற்று பனிப்பொழிவு மேலும் அதிகரித்ததால் குளிர் வாட்டியது. மாலையில் லேசான சாரல் மழையும் பெய்ததால் மேலும் குளிர் அதிகரித்தது. குடியரசு தின விழாவையொட்டி ஏற்காடு சென்ற சுற்றுலா பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகினர். இன்று காலை வரையும் ஏற்காட்டில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவில் சாரலாக நீடித்தது. இதில் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 4.2 மி.மீ. மழையும், தர்மபுரி மற்றும் பாப்பிரெட்டிபட்டியில் 2 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் தொடங்கிய மழை கிருஷ்ணகிரி, ஒசூர், காவேரிபட்டினம் உள்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் சாரலாக நீடித்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.